மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் முதல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் 14 ஆவது சீசன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. சென்னையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இண்டியன்ஸ், ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் அணியுடன் விளையாடியது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பெங்களூரு அணி தலைவர் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
மும்பை அணிக்கு தொடக்க வீரர்களாக தலைவர் ரோஹித் சர்மா மற்றும் கிறிஸ் லின் களமிறங்கினார்கள்.
முதல் இரண்டு ஓவர்களில் பொறுமையாக விளையாடிய ரோஹித், அடுத்தடுத்து பவுண்டரி, சிக்ஸர் அடித்து அதிரடிக்கு திரும்பிய நிலையில் 19 (15) ஓட்டங்களில் கோலியின் ரன் அவுட்டால் ஆட்டமிழந்தார்.
அடுத்து கிறிஸ் லினுடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் வழக்கம்போல் அதிரடி ஆட்டத்தை தொடங்கினார்.
அரை சதம் கடந்து பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடிக் கொண்டிருந்த இந்த ஜோடி ஜேமிசன் பந்தில் சூர்யகுமார் 31 (23), சுந்தர் பந்தில் லின் 49 (35) அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள்.
பின் ஜோடி சேர்ந்த இஷான் கிஷண், ஹாா்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்த தொடங்கினார்கள்.
ஆனால் ஹா்ஷல் படேல் பந்தில் ஹார்திக் 13, இஷான் 28 ரன்களில் இருவரும் ஆட்டமிழந்தார்கள்.
ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் போலார்டுடன் ஜோடி சேர்ந்த குர்னல் பாண்டியா 7 ஓட்டங்களில் ஹா்ஷல் பந்தில் ஆட்டமிழக்க, அடுத்த பந்திலேயே போலார்டும் 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஹாட்ரிக் சாதனை படைக்க வீசப்பட்ட கடைசி ஓவரின் 3வது பந்து ஓட்டம் ஏதும் எடுக்கப்படாத நிலையில் 4வது பந்தில் மாா்கோ ஜென்சென் போல்டானார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளுக்கு 159 ஓட்டங்களை மும்பை அணி எடுத்தது.
இதனைத் தொடர்ந்து 160 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி, ஆரம்பத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
வாஷிங்டன் சுந்தர், ரஜத் பட்டிதர் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் வெளியேற அடுத்து களமிறங்கிய மேக்ஸ் வெல், டிவில்லியர்ஸ் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அவர்களும் ஆட்டமிழந்த பின்னர், தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இறுதியில், கைல் ஜேமீசன், முகமது சிராஜ் ஆகியோர் களத்திலிருந்தனர்.
இறுதி ஓவரில் ஒரு ஓட்டத்தை எடுத்து விக்கெட்டுகள் இழப்பிற்க்கு 160 ஓட்டங்களை எடுத்து பெங்களூரு அணி வெற்றி பெற்றது.