இந்தியாவின் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் முதல் மாடியில் நின்றிருந்த நபர் நினைவற்றும் சுருண்டு விழுந்த நிலையில், அவருக்கு அருகாமையில் நின்ற நபர் கண்ணிமைக்கும் நொடியில் அவரை காப்பாற்றியுள்ள சம்பவம் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
கோழிக்கோடு மாவட்டம் வடகரா பகுதியில் இச்சம்பவம் கடந்த வாரம் நடந்துள்ளது. அதன் காணொளி காட்சிகள் தற்போது வெளியாகி, இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.வடகரா பகுதியில் அமைந்துள்ள கேரளா வங்கி கிளையிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. முதல் மாடியில் அமைந்துள்ள வங்கியின் வராண்டாவில் வங்கி வாடிக்கையாளர்கள் இருவர் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று பாபு என்பவர் நினைவற்று, சுருண்டு முதல் மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.ஆனால் அவருக்கு அருகாமையில் நின்றிருந்த பாபுராஜ் என்பவர் கண்ணிமைக்கும் நொடியில் பாய்ந்து சென்று, கீழே விழவிருந்த நபரின் காலில் கெட்டியாக பிடித்துள்ளார்.
மட்டுமின்றி, வங்கியில் இருந்த வாடிக்கையாளர்களையும் உதவிக்கு அழைத்துள்ளார். பின்னர் அனைவரும் சேர்ந்து அந்த நபரை காப்பாற்றியுள்ளனர். பாபுராஜின் சமயோசித முடிவே சுருண்டு விழுந்த நபரை மரணத்தில் இருந்து காப்பாற்றியுள்ளது.பாபுராஜின் இச்செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளதுடன், தற்போது இணையத்திலும் அந்த காட்சிகள் பகிரப்பட்டு வருகிறது.