எல்லைதாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 07 தமிழக மீனவர்கள் நேற்றையதினம் (09) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மீனவர்களை விடுவிக்கக்கோரியும் மீனவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று (9)மீன்பிடிக்கச் சென்ற ஏழு மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறி படகுடன் சிறை பிடித்துச் சென்ற இலங்கை கடற்படையை கண்டித்தும், கைது செய்யப்பட்ட மீனவர்களை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தியும் கைது செய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் மதுரை தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வீதிமறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இராமேஸ்வரத்திற்கு வரக்கூடிய பிரதான வீதியில் மீனவர்களின் உறவினர்கள் அமர்ந்து வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையினால் சுமார் ஐந்து கிலோ மீற்றர் தூரத்திற்கு இரு புறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களின் உறவினர்களிடம் பொலிஸார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்தும் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.