மாவீரர் நாள் என்பது ஒரு துக்க நாள் அல்ல என்றும், மாவீரர் நாள் ஒரு எழுச்சி நாளாக மிகவும் புனிதமானதாக கருதப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில், அதனை தனிப்பட்ட தேவைகளுக்காக யாரும் இதனை மாற்றியமைக்க முற்படக்கூடாது என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ .கதிர் தெரிவித்துள்ளார்.
இன்று முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அதோடு மாவீரர் தினத்தை ஏனைய தேவைகளுக்காக யாரும் பயன்படுத்துவதை மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
தமிழ்மக்களின் தமிழ்தேசிய விடுதலைக்காக இந்த மண்ணில் இலங்கை அரசாங்கத்துடன் போராடி வீரமரணம் அடைந்த மாவீரர்களை நினைவுகொள்வதற்காக தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்ட நாளிலே அந்த மாவீரர் நாள் எமது மண்ணில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
இதுவரை காலமும் மாவீரர் நாள் என்பது ஒரு துக்க நாளாக அல்லாமல் ஒரு எழுச்சி நாளாகத்தான் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. தமிழீழ வீடுதலைப்போராட்டத்தில் முதல் மரணித்த மாவீரன் சங்கர் அவர்கள் மரணித்த நேரத்தில் நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
தேசியத்தலைவர் அவர்களால் தமிழ் மக்களின் நலன் விரும்பிகள், புத்திஜீவிகள் ஒன்றிணைந்து உலகத்தமிழர்களின் அங்கீகாரத்துடன் நியமிக்கப்பட்ட மாவீரர் நாள் தமிழர்களின் தேசிய எழுச்சி நாளாக ஆண்டாண்டு காலம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
தமிழினம் உலகத்தில் வாழும் வரை இந்த நாளில் எழுச்சிநாள் கடைப்பிடிக்கப்பட்டு வரும், இந்த நாள் தொடர்பில் பல சர்சைக்குரிய கருத்துக்கள் அண்மைய நாட்களாக வந்தவண்ணமுள்ளது.
இந்த நிலையில் ஒன்றிணைந்த வட கிழக்கு ஆயர் இல்லங்கள் இந்த நாள் தொடர்பில் மாற்றங்களை ஏற்படுத்த திட்டமிட்டிருப்பது கலந்துரையாடி இருப்பதாக அறிகின்றோம். உண்மையில் மாவீரர் நாள் தொடர்பாகவோ எமது விடுதலைப்போராட்டங்கள் தொடர்பாகவோ சம்மந்தப்படாத தரப்புக்கள் தீர்மானங்களை நிறைவேற்றுவது அனுமதிக்கமுடியாது எனவும் அவர் கூறினார்.
என்னுடன் பல மாவீரர் குடும்பங்கள் இந்த விடயம் தொடர்பில் அழைப்பினை ஏற்படுத்தி பல வேதனைகளை தெரிவித்துள்ளார்கள். இந்த நிலமை தொடருமாக இருந்தால் மாவீரர்களின் பெற்றோர்கள் பெரும் அணிகளாக திரண்டு ஆயர் இல்லங்களுக்கு எதிராக பலமான எதிர்ப்புக்களை கொடுப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் நாம் அவர்களின் கருத்தினை மதிக்கின்றோம். தயவு செய்து மதம் சார்ந்த விடயங்களுக்காக வீரர்களின் நினைவுநாளில் மாற்றம் செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
அதோடு நீங்கள் வெளிட்ட அறிக்கைகளை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் சிறந்த புத்திஜீவிகள். பல விடயங்களை கற்றறிந்தவர்கள். தேவையற்ற விடயத்தில் தலையிடுவது இனத்திற்கு துரோகம் செய்யும் நிலைப்பாடாக எமது மக்களால் கருதப்படும் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கின்றேன் என்றும் அவர் கூறினார்.
மாவீரர்களின் துயிலும் இல்லங்களுக்குள் நாங்கள் செல்கின்றபோது எங்கே எங்கள் தமிழீழம் என்றுதான் கேட்பார்கள். மாவீரர்கள் அதனை நாங்கள் அடைய முடயாத ஒரு நிலையில் திறந்த வெளி சிறைச்சாலைக்குள் முடக்கப்பட்டு எங்கள் உரிமைக்காக குரல் கொடுக்கமுடியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
இவ்வாறான ஒரு நிலையில் தயவு செய்து ஏனைய செயற்பாட்டாளர்களாக இருந்தாலும் சரி மாவீரர் நாள் தொடர்பில் தேவையற்ற முடிவுகளை தீர்மானிக்க வேண்டாம். அதோடு மாவீரர்களை நினைவுகூருவதை யாராலும் தடுக்கமுடியாது.
அவர்கள் விதைக்கப்பட்ட துயிலும் இல்லங்களுக்குள் நாங்கள் நுளைவதற்கு இலங்கை அரசாங்கம் சட்டரீதியான தடைகளை போட்டுவைத்திருக்கின்றது. அந்த தடைகளை உடைத்துக்கொண்டு நினைவு நாளை கடைப்பிடிக்க முடியுமானால் அதுதொடர்பில் அனைவரும் ஒன்றாக முடிவெடுத்து செயற்படவேண்டும்.
இல்லையேல் எங்கள் மாவீரர்களுக்கான அஞ்சலியினை இதயசுத்தியுடன் நேர்மையாக எமது இல்லங்களில் அவர்களுக்கு விழக்கேற்றி அகவணக்கம் செலுத்துவது சிறந்தாக அமையும். மாவீரர்கள் எங்களை விட உயர்ந்தவர்கள்.
அவர்களின் உன்னதமான தியாகங்களை நினைவிற்கொள்வது இதயசுத்தியுடன் கடைப்பிடிக்க வேண்டி எழுச்சிநாள் ஆகும். இந்த நாளினை அரசியலுக்காகவே ஏனைய தேவைகளுக்காகவோ தனிப்பட்ட சொந்த நலன் சார்ந்த விடயங்களுக்காகவோ யாரும் பயன்படுத்துவதை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் கூறிய அவர் நீங்களும் இதனை செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அதேவேளை அரசாங்கத்துடன் மாவீரர்நாள் தொடர்பில் பேச்சுக்களில் ஏதும் ஈடுபட்டுள்ளீர்களா என ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளித்த கதிர், கடந்த ஆட்சியில் இருந்தவர்களிடமும் தற்போதைய பிரதமர், ஜனாதிபதி ஆகியோருடன் அரசியல்ரீதியில் எங்கள் மக்கள் நிலைப்பாடு தொடர்பில் பேசியுள்ளோம்.
அந்த காலத்தில் மாவீரர் நினைவு தொடர்பில் முக்கிய விடயங்களை நாங்கள் முன்வைத்துள்ளோம். நாங்கள் நினைக்கின்றோம் இந்த மண்ணில் இந்த அரசாங்கத்திற்கும் அரச படைகளுக்கு எதிராகவும் போராடி இந்தமண்ணில் மரணித்த மாவீரர்களுக்கான அங்கீகாரத்தினை இலங்கை அரசாங்கம் தருவது நடைமுறைக்கு சாத்தியமான விடயமாக தெரியவில்லை.
அந்த அங்கீகாரம் என்பது தமிழர்களுக்கு தனிநாட்டு அங்கீகாரமாக அமைந்து விடலாம் என்ற அச்ச உணர்வு அவர்களுக்கு இருக்கின்றது. நாங்கள் எதிர்காலத்தில் எந்தளவிற்கு ஒற்றுமையாக பலமாக நின்ற செயற்படுகின்றோமோ அந்த அங்கீகாரத்தினை அடைவதற்கு அதுதான் சந்தர்ப்பமாக அமையும் எனவும் அவர் கூறினார்.
இலங்கை அரசாங்கத்துடன் பேசி சட்டரீதியாக நிரந்தரமான ஒரு அனுமதியினை பெற்றுக்கொள்ளமுடியாது. ஒவ்வொரு அரசாங்கமும் ஆட்சிக்கு வருகின்றபோது நேரடியாக ஆதாரிப்பதும் மறைமுகமாக எதிர்ப்பதும் போன்ற நிலைப்பாடுகள் இருக்கின்றன.
இந்த மண்ணில் எங்கள் இனம் வாழும் வரைக்கும் மாவீரர் நினைவுநாளினை கடைப்பிடிப்பதற்கு ஒரு ஜனநாயரீதியான முறையில் அதற்கான அங்கீகாரத்தினை பெற்றுக்கொள்வதற்கு முயற்சிசெய்துகொண்டிருக்கின்றோம் என்றும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.