அன்று சுகபோக வாழ்வு வாழ்ந்த வசதிபடைத்த குடும்பங்களிடையே மட்டும் அதிகம் பரவியிருந்த மாரடைப்பு, நீரிழிவு போன்ற நோய்கள் இன்று அனைவரையும் அசுர வேகத்தில் தாக்க ஆரம்பித்திருப்பதன் காரணம் என்ன?, இது குடும்பங்களின் பொருளாதாரத்திலும், வாழ்வாதாரத்திலும் ஏற்படுத்தும் தாக்கங்களைத் தடுத்து நிறுத்துவது எப்படி?
இந்த நோய் வேகமாக அதிகரித்து வருவதற்கான அடிப்படைக் காரணங்களாக பின்வருவன அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன.
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்க வழக்கங்கள்
உடல்களைக்க வேலை செய்யாமை அல்லது உடற்பயிற்சி செய்யாமை
உடல் நிறையை சரியான அளவில் பேணப்படாமை
இரசாயனப் பதார்த்தங்களும், சீனியும் சேர்க்கப்பட்டு போத்தல்களில் அடைத்து விற்பனையாகும் பாகங்கள் அதிகம் அருந்துதல்.
மக்களிடையே ஆரோக்கியம் பேணுவது சம்பந்தமான அறிவும், விழிப்புணர்வும் போதாமலிருத்தல், சுகாதார பிரச்சினைகளை ஆரம்ப நிலையில் கண்டறிந்து ஏற்ற நடவடிக்கைகளை எடுக்காது விடுதல்.
இந்தக் காரணங்களுக்கு மேலதிகமாக எமது சமூகத்தில் வயதானவர்களின் விகிதாசாரம் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாகவும் நீரிழிவு, இருதய நோய்கள் ஏற்படும் வீதம் வேகமாக அதிகரித்து வருகின்றது.
நீரிழிவு நோய்த்தடுப்பு அல்லது இருதய நோய்த்தடுப்பு என்னும் பெரிய முயற்சியை மருத்துவத்துறை சார்ந்தவர்களின் முயற்சியால் மட்டும் நிறைவு செய்துவிட முடியாது. இதற்கு அனைத்து தரப்பினரதும் தொடர்ச்சியான முயற்சி முக்கியமாக தேவைப்படுகின்றது.
உடற்பயிற்சி செய்வதை அனைத்து தரப்பினருக்குமான ஒரு கட்டாய நடவடிக்கையாக அறிமுகம் செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்யாதிருப்பது இருதயநோய்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தை இரண்டு மடங்காக அதிகரிக்கச் செய்கின்றன. ஒழுங்காக உடற்பயிற்சி செய்துவருவோமாக இருந்தால் புற்றுநோய், நீரிழிவு, பாரிச்வாதம், மாரடைப்பு, உயர்குருதி அமுக்கம், நுரையீரல் நோய்கள் போன்றவை ஏற்படும் சந்தர்ப்பத்தை பெருமளவு குறைத்துக்கொள்ள முடியும். அத்துடன் ஒழுங்கான உடற்பயிற்சி மூலம் எலும்பு மூட்டுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். இதற்கு மேலதிகமாக மன அழுத்தத்தை குறைத்து உள ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் இது உறுதுணையாக அமைகிறது
பெற்றோர்கள் ஒவ்வொருவரும் தமது பிள்ளைகள் தினந்தோறும் ஓடி விளையாடுகிறார்களா? அல்லது உடற்பயிற்சி செய்கிறார்களா? என்பதை கவனித்துக்கொள்ள வேண்டும். ஊடகத்துறை நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கும், சுகாதார வழிப்பணர்வு நடவடிக்கைகளுக்கும் கூடிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சுகாதாரத்துறை சார்ந்தவர்களும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு இன்னும் கூடிய முக்கியத்துவம் கொடுப்பதுடன் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ முயற்சிக்க வேண்டும். பரிசுப் பொருள்களைத் தெரிவு செய்யும் பொழுது இனிப்பு வகைகளைத் தெரிவுசெய்வதை முற்றாக தவிர்க்கவேண்டும். சுப வைபவங்களின் பொழுதும் வீட்டுக்கு வருபவர்களுக்கும் சோடா கொடுப்பதை நிறுத்த வேண்டும்.
தற்பொழுமு பலர் நீரிழிவு அல்லது மாரடைப்பு நோய்களுக்கு முற்பட்ட நிலைகளிலே இனங்காணப்படுகின்றனர். இந்த நிலையை மெற்றாபோலிக்சின்றேம் என்று சொல்வார்கள். இவர்கள் தொடர்ச்சியாக தேக ஆரோக்கிய நடவடிக்கைகளில் ஈடுபடாதுவிட்டால் எதிர்காலத்தில் இவர்களுக்கும் இந்த நோய்கள் ஏற்படமுடியும். இந்த நிலையில் உள்ள சிலருக்கு நோய்தடுப்புக்காக சில மாத்திரைகளும் கொடுக்கப்பட வேண்டிய தேவை ஏற்படுகின்றது.நாம் அனைவரும் ஆரம்பத்திலிருந்தே தேக ஆரோக்கிய நடவடிக்கைகளைக் கடைப்பிடித்துவந்தால் எந்த நோயுமின்றி எந்த மாத்திரைகளும் இன்றி ஆரோக்கியத்துடன் வாழ முடியும்..
சி.சிவன்சுதன்
வைத்திய நிபுணர்