கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள்மீது பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படமாட்டாது சாதாரண சட்டமே பயன்படுத்தப்படும் என தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (31) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 25 பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
சஜித் பிரேமதாஸவின் கருத்து
அரசாங்கத்தின் இந்த ஏதேச்சதிகார செயலை வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்திருந்தார்.
போராட்டம் நடத்தும் உரிமை அனைவருக்கும் உள்ளது. அதனை ஒடுக்க முற்படுவது ஜனநாயக விரோதச்செயலாகும் எனவும் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தும் திட்டம் உள்ளதா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் தினேஷ் குணவர்தன, அடிப்படை உரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளை எமது அரசாங்கம் பாதுகாக்கும் என குறிப்பிட்டார்.
உரிமை என்பது அனைவருக்கும் பொதுவானது. தனி நபருக்குரிய உரிமை, ஏனையவர்களின் உரிமையை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படமாட்டாது, சாதாரண சட்டமே பயன்படுத்தப்படும் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார்.