இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து எந்தவொரு ராஜபக்ஷவும் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதுடன் நாமல் ராஜபக்ஷகூட தேசியப் பட்டியலுக்குள் நுழைந்துள்ளார்.
எனினும் ராஜபக்ஷ குடும்பத்தில் இருந்து ஒருவர் மாத்திரமே – சசீந்திர ராஜபக்ஷ, மொனராகலை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பெருந்தலைவர்களில் ஒருவர்தான் காமினி திஸாநாயக்க.
நவீன் திஸாநாயக்க மற்றும் மயந்த திஸாநாயக்க ஆகியோரின் தந்தை அவர். காமினி திஸாநாயக்கவின் மறைவின் பின்னர் அவரது மனைவி தேர்தலில் ஈடுபட்டார்.
அதன்பின்னர் நவீன் திஸாநாயக்க, மயந்த திஸாநாயக்க ஆகியோர் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டனர். எனினும் இம்முறை இருவரும் போட்டியிடவில்லை.
அதேவேளை சேமசிங்க குடும்ப வாரிசான செஹான் சேமசிங்கவும் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை.
ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினரான லக்ஸ்மன் கிரியெல்ல, தனது மகளுக்கு அரசியல் களத்தை அமைத்துக் கொடுப்பதற்காக இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை.
அதேசமயம் கண்டி மாவட்ட எம்.பியான குணதிலக ராஜபக்ஷவும், தனது மகனைக் களமிறக்கிவிட்டு ஓய்வுபெற்றுள்ளார். இதேவேளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, குடியரசுக் கட்சியின் தலைவர் சம்பிக்க ரணவக்க, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, மஹஜன எக்சத் பெரமுனவின் தலைவர் தினேஷ் குணவர்தன, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் மூத்த தலைவர் வாசுதேவ நாணயக்கார, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோரும் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.