நாட்டில் ஏற்பட்ட வன்முறையில் , சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாவுக்கு அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடித்துடைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசியல்வாதிகளினது வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமாக்கப்பட்டதால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதேசமயம் , காப்புறுதி செய்யப்பட்ட சொத்துகளுக்காக நஷ்ட ஈடு வழங்குவதற்கு ஒரே முறையில் பெருந்தொகையான நிதி தேவைப்படுவதால், காப்புறுதி நிறுவனங்களும் பெரும் பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துள்ளன.
கடந்த வாரம் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களின் பின்னர் 55 அமைச்சர்கள் அரசியல்வாதிகளின் வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த சம்பவங்களில் 200க்கும் அதிகமான வாகனங்கள் தீ இடப்பட்டுள்ளதாகவும் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்ற கூட்டத்துக்கு வந்த பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்களை அழைத்து வந்த 40 பஸ்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
மேலும் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு சொந்தமானது என கூறப்படும் மல்வான பிரதேசத்திலுள்ள சொகுசு வீடும் தீயிடப்பட்டது. இதன் காரணமாக 200 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது