தன் மனைவியின் செல்லப் பெயரை பக்கத்து வீட்டு பெண் தனது நாய்க்கு வைத்ததால், ஆத்திரமடைந்த நபர் அந்த பெண்ணை தீ வைத்து எரித்த கொடூர சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருகையில், நீடாபென் சர்வையா (வயது 35) என்ற பெண் செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து அதற்கு ‘சோனு’ என செல்லப் பெயர் வைத்து அழைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண்ணின் அயலவரான சுராபாய் பர்வத் என்பவரும் தனது மனைவியை செல்லமாக ‘சோனு’ என அழைத்து வந்துள்ளார். இந்த பெயர் காரணமாக இருவீட்டாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கடந்த திங்களன்று நீடாபென் இளைய மகன் உடன் வீட்டில் இருந்த போது, அங்கு 5 பேருடன் சென்ற சந்தேக நபர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு அவரை தாக்கியதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்கப்பட்ட குறித்த பெண் சமையலறைக்கு சென்று தப்பிக்க முயன்றபோது , சந்தேக நபருடன் வந்த மற்றுமொரு நபர், அங்கிருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து நீடாபென் மீது ஊற்றி தீவைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து தீப்பற்றி அலறிய பெண்ணை மீட்ட அயலவர்கள், அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.