மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்றில் முதல் தடவையாக பாரியளவிலான நிதியொதுக்கீட்டில் வீதியமைப்பு பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.
பொதுஜன பெரமுனவின் அமைப்பாளரும் மாவட்ட தமிழ் பிரதேச பரமசிவம் சந்திரகுமார், நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிடம் விடுத்தவேண்டுகோளுக்கு அமைவாக இந்த வீதியை புனரமைப்பதற்கான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் கிராமிய வீதிகள் மற்றும் பாலங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் 1608 மில்லியன் ரூபா செலவில் சுமார் 43கிலோமீற்றர் வீதிகள் புனரமைக்கப்படவுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையிலிருந்த கிரான்-குடும்பிமலை வீதி மற்றும் இலுப்பையடிசேனை-05ஆம்கட்டை சந்தி வரையிலான வீதிகளும் வேப்பவட்டுவான் வீதி ஆகியவற்றின் புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டன.
குறித்த வீதியினை புனரமைக்க நடவடிக்கைகளை எடுத்த அரசாங்கத்திற்கும் பொதுஜன பெரமுனவின் அமைப்பாளரும் மாவட்ட தமிழ் பிரதேச பரமசிவம் சந்திரகுமாருக்கும் பிரதேச மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதன்போது உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட பொதுஜன பெரமுனவின் அமைப்பாளரும் மாவட்ட தமிழ் பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்ததாவது,
இலங்கை அரசாங்கம் அனைத்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் முழு நாட்டுக்கும் சமனாகவே வழங்குகின்றது. இனவேறுபாடுகள் பார்க்காமல் பல்வேறு உதவி திட்டங்கள் வழங்கப்படுகின்றது.
யுத்ததினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எனக்கு மட்டுமே 8000 மில்லியன் ரூபா பெறுமதியான வீதிகள் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அவர்கள் அனுராதபுரத்தில் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பினையும் ஏற்படுத்த அனுமதிக்கமாட்டேன் என கூறியிருந்தார்.விவசாயிகளின் கஷ்டங்களை உணர்ந்து அவர்களுக்கு தேவையானவற்றை வழங்க அரசாங்கம் தயாராகவுள்ளது.
உரப்பிரச்சினையை எதிர்கொண்டு நஷ்டத்தினை எதிர்கொண்டவர்கள் தொடர்பில் ஆராய விசேட குழு அமைக்கப்பட்டுள்ளது.அதன் ஊடாக விவசாயிகளுக்கு நஷ்ட ஈடுகள் வழங்கப்படும்.
கோவிட் தொற்று காரணமாக அரசாங்கம் தீர்மானித்த விடயங்களை செய்யமுடியாமல் போய்விட்டது. சிலர் கூறுகின்றார்கள் ஆட்சிமாறும் என்று. ஆனால் இன்னும் 10வருடங்களுக்கு பொதுஜன பெரமுன கட்சியின் ஆட்சியை யாராலும் அசைக்கமுடியாது.
அவ்வாறான சக்தி வெளியில் யாருக்கும் இல்லை. இலங்கையினை கொண்டு நடாத்தக்கூடிய ஒரேயொரு சக்தி மகிந்த ராஜபக்ஸவின் குடும்பத்திற்கேயிருக்கின்றது.
கோவிட்டை ஜனாதிபதி சிறப்பாக கையாண்டுவருகின்றார். அனைவருக்கும் இன்று மூன்றாவது தடுப்பூசியை செலுத்துவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
இன்று நல்லாட்சி ஆட்சியிலிருந்திருந்தால் சம்பந்தன் ஐயா ஒரு பக்கம் இழுத்திருப்பார்,ஹக்கீம் ஒரு பக்கம் இழுத்திருப்பார்.ஒவ்வொரு பக்கமும் இழுத்து அந்த ஆட்சியை நடக்கவிட்டிருக்கமாட்டார்கள்.
ஆனால் இந்த அரசாங்கம் ஒரு உறுதியான அரசாங்கம்.இரண்டரை வருடத்திற்குள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும் நிறைவேற்றும்.
தமிழ்தேசியத்தினை நேசித்து பல விலையினைக் கொடுத்தது இந்த கிரான்மண்.ஆனால் தமிழ் தேசியத்திற்காக கொடுத்த விலைக்கு என்ன கைமாறு கிடைத்தது என்பதை அனைவரும் உணரவேண்டும் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
இந் நிகழ்வில் 231வது பிரிவின் மட்டக்களப்பு மாவட்ட கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் நிலாந்த கொஸ்வத்த, தரவை பிரதேச கட்டளை அதிகாரி பிரிக்கேடியர் பாலசூரிய உட்பட பலர் கலந்துகொண்டனர்.