மட்டக்களப்பு – வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் விநியோகத்தின் போது ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் கிடைக்கும் என இன்று(25) அதிகாலை முதல் நீண்ட வரிசையில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பலரும் காத்திருந்தனர். இதேபோன்று கடற்றொழிலாளர்கள் பிறிதொரு வரிசையில் காத்திருந்தனர்.
காலை 9.30 மணியளவில் காத்திருந்த மக்களுக்கு ஒரு லீட்டர் அளவே மண்ணெண்ணெய் வழங்கப்படும் என அறிவித்தல் வழங்கி விநியோகம் செய்ய ஆரம்பிக்கப்பட்டவேளை காத்திருந்த மக்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களது தேவையை பூர்த்தி செய்ய வழங்கப்படும் மண்ணெண்ணெய்யின் அளவு போதாது என்றும், 5 லீட்டர் அளவே தேவை என்றும் வலியுறுத்தி மண்ணெண்ணெய்யைப் பெற்றுக்கொள்ள மக்கள் மறுப்புத் தெரிவித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.
இதன்போது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டு குழப்பநிலை காணப்பட்டுள்ளது.
பின்னர் குறித்த விடயத்துக்கு நியாயம் வேண்டி அருகிலுள்ள வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு சென்று நிலைய பொறுப்பதிகாரி வசந்த பண்டாரவிடம் தங்களது நிலைப்பாட்டை மக்கள் தெரிவித்துள்ளனர்.
நிலைமைகளை கேட்டறிந்து கொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பவ இடத்துக்கு வருகை தந்து மக்களது கோரிக்கை தொடர்பாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளருடன் கலந்துரையாடிய பின்னர் 4 லீட்டர் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை கடற்றொழிலாளர்களுக்கும் 15 லீட்டர் அளவு மண்ணெண்ணெய் வழங்கப்பட்டுள்ளது.