நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையை போலவே மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரச தரப்பில் உள்ளவர்கள் மூடி மறைக்கின்றனர் என நேற்றைய பாராளுன்ற அமர்வை பகிர்ஸ்கரிப்பு செய்ததன் பின் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இடம்பெற்ற மாற்று பாராளுமன்ற கலந்துரையாடலில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 2022 வரவுசெலவு திட்டத்தின் குழுநிலை விவாதம் நடைபெற்று வருகின்றது. கடந்த வாரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அமர்வை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பகிஸ்கரித்தனர். சபாநாயகர் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னரே அமர்வுகளில் கலந்துகொள்வதாகவும் அதுவரை மாற்று பாராளுமன்ற கலந்துரையாடலை முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டனர். அதன் போது பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.
இன்றைய அரசாங்கம் நாட்டு மக்களின் பிரச்சினையை போலவே மலையக மக்களின் பிரச்சினைகளை மூடி மறைக்கின்றது. அதற்க்கு பாராளுமன்றத்திற்குள்ளும், பாராளுமன்றத்திற்கு வெளியிலும் துணைபோகும் அரசு சார்ந்த மலையக தரப்பினர் உள்ளனர். வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் தாம் முடிவடைந்த ஆண்டில் முன்னெடுத்த வேலை திட்டங்களை வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு தமது அரசில் தாமாக மேற்கொண்ட வேலை திட்டம் எதுவும் கூறப்படவில்லை.
அதே போல எதிர்வரும் ஆண்டில் மேற்கொள்ள உள்ள முக்கிய வேலை திட்டங்களை விபரிக்க வேண்டும். அவ்வாறு எதுவும் விபரிக்கப்படவும் இல்லை. எமது நல்லாட்சி காலத்தில் முன்னெடுத்த வேலை திட்டங்கள் முழுமைப்படுத்தி இருக்கின்றோம் என்பதே இங்கு முன்வைக்கப்பட்டது.
அதே போன்று எதிர்வரும் மாதங்களில் எஞ்சியிருக்கும் வீடுகளுக்கான வசதிகள் முழுமைப்படுத்துவதாக சொல்லப்பட்டது. இந்திய அரசின் 10000 வீட்டு திட்டம் என்பது என்ன என்பது எங்கள் அனைவருக்கும் தெரிந்ததாகும். அதனை கோடிட்டு காட்டி பிரதமரும் மலையக மக்களின் பிரச்சினையில் இருந்து ஒதுங்கிக்கொண்டதே தெரிந்தது.
இன்று மலையக மக்கள் எதிர்நோக்கும் உண்மையான பிரச்சினைகள் வெளிப்படுத்தப்படவில்லை. பெருந்தோட்ட காணிகள் பெருமளவில் வெளியாறுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அது தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசி தடுப்பதற்கான நடவடிக்கையை கோரியிருக்க வேண்டும். ஆனால் மாறாக பெருந்தோட்டங்களில் உள்ள தரிசு நிலங்களை இனம் காணுகின்றோம், அவற்றை தோட்டங்களில் உள்ள இளைஞர்களுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்திருக்கின்றோம், கேட்டிருக்கின்றோம், சிபாரிசு செய்திருக்கின்றோம் என்பதெல்லாம் வெறும் மூடி மறைப்பாகும்.
இன்றைய மலையக மக்களின் பிரதான சவால் இந்த அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களிடம் இருந்து பெருந்தோட்ட காணிகளை பாதுகாத்துக்கொள்வதே ஆகும். மறுபுறம் கோதுமை மா உட்பட விலைவாசிகள் பெருமளவில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மலையக மக்களின் பொருளாதாரத்தை எவ்வாறு சீர்படுத்துவது எனபது தொடர்பாக எவ்வித திட்டமும் இல்லை. சம்பள பிரச்சினைக்கான கொள்கை ரீதியான எவ்வித தீர்வும் இல்லை. அன்று இளைஞர் யுவதிகளின் வேலை வாய்ப்பு தொடர்பாக பெரிதுபடுத்தி பேசினார்கள். ஆனால் இன்று அதுபற்றி பேச்சே இல்லை.
இன்றைய அரசாங்கத்தின் மூலம் மலையக மக்களுக்கு எந்த நன்மையையும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை என அதற்கான வேலைத்திட்டம் ஒன்று இல்லை என வெளிப்படையாக தெரிகின்றது. மலையக மக்களின் வீட்டு திட்டத்தை முன்னெடுக்க முடியவில்லை, சம்பள பிரச்சினைக்கு தீர்வை எட்ட முடியவில்லை. வெளியாருக்கு காணிகளை கொடுப்பதை நிறுத்த முடியவில்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க முடியவில்லை.
இந்நிலையிலே தமது இயலாமையை மறைத்து அரசாங்கத்தை காப்பாற்ற பார்ப்பது நியாயமானதல்ல. மாறாக மலையக மக்களின் உண்மை பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தி தமது குழுநிலை விவாதங்களில் எடுத்துக்காட்டி மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வை எட்டுவதே நியாயமானதாகும். ஆனால் இன்றைய விவாதத்தில் அது நடைபெறவில்லை என கூறினார்.