நம்முடைய வாழ்வில் ஏற்படும் பல பிரச்சனைகள், கஷ்டங்களுக்கு பித்ருக்களின் சாபமும் ஒரு முக்கியமான காரணம் ஆகும்.
இந்த சாபங்களில் இருந்தும் துன்பங்களில் இருந்தும் விடுபடுவதற்கு ஏற்ற காலம் மகாளய பட்ச காலமாகும்.
ஒரு மாதத்தின் சரிபாதியே பட்சம் எனப்படும் அமாவாசையை நோக்கிச் செல்லும் நாட்களை கிருஷ்ண பட்சம் எனவும் பௌர்ணமியை நோக்கி நகரும் நாட்கள் சுக்கில பட்சம் எனவும் நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.
அதே போல மகாளய பட்சம் என்பதும் பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு காலம் ஆகும். ஆவணி மாதப் பௌர்ணமியை அடுத்த பிரதமையிலிருந்து புரட்டாசி அமாவாசை வரை உள்ள நாட்கள் மகாளய பட்சம் என்று அழைக்கப்படுகிறது.
மகா+ஆலயம் என்பதே மகாளயம் என்றானது ஆன்மாக்கள் லயிக்கும் இடம் என்பதே ஆலயம். அதாவது முன்னோர்களின் ஆன்மாக்கள் பூவுலகில் வந்து லயிக்கும் நாட்களே மகாளய பட்சம் எனப்படும்.
இந்த மகாளய பட்சத்தில் யமதர்மனின் அனுமதியோடு நமது முன்னோர்கள் அனைவரும் பூமிக்கு வருகிறார்கள் என்றும் அவர்கள் சூரியனின் ஒளிக்கதிர்கள் வழியாக வருகிறார்கள் என்றும் கருடபுராணம் கூறுகிறது.
அவ்வாறு அவர்கள் வரும்போது தங்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள் என அனைவரும் தங்களை நினைக்கிறார்களா? உணவும் நீரும் வழங்குவார்களா? என்ற ஏக்கத்தோடு வருவார்கள்
அப்போது நாம் அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளையோ, பழ வகைகளையோ தானம் செய்தால் அவர்களின் தாகமும், பசியும் தீர்ந்து மகிழ்வுடன் திரும்பி செல்வார்கள் என்பது நம்பிக்கை.
மாதந்தோறும் வரும் அமாவாசை திதி முன்னோர் வழிபாட்டிற்கு ஏற்றது என்றாலும் வருடத்தில் வரும் மூன்று அமாவாசைகள் மிக முக்கியமானவையாகும்.
தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் மகாளய அமாவாசை ஆகிய மூன்று அமாவாசைகளும் மிகவும் சிறப்பானவையாகும்.
காரணம் ஆடி அமாவாசையில் முன்னோர்கள் நம்மை காண்பதற்காக பித்ருலோகத்தில் இருந்து புறப்படும் காலமாகும்.
மகாளய அமாவாசையில் பித்ருக்கள் நம்முடன் தங்கி இருந்து நாம் செய்யும் தர்ப்பணங்களை ஏற்று நமக்கு ஆசி வழங்கக் கூடிய காலம்.
தை அமாவாசை என்பது பித்ருக்கள் நமக்கு ஆசி வழங்கி விட்டு மீண்டும் பித்ருலோகத்திற்கு புறப்பட்டு செல்லும் காலமாகும்.
இவற்றில் மற்ற எந்த அமாவாசைக்கும் இல்லாத தனிச்சிறப்பு புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசைக்கு உண்டு.
மாதந்தோறும் அமாவாசை விரதம் இருந்து முன்னோர்களுக்கு திதி கொடுக்க முடியாதவர்கள் இந்த புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசையில் விரதம் இருந்தால் 12 மாதங்களும் விரதம் இருந்ததற்கு சமம் என்று ஜோதிடர்கள் கூறுவார்கள்.
இத்தகைய சிறப்பு மிக்க மகாளய பட்சம் இந்த ஆண்டு செப்டம்பர் 30 ம் திகதி துவங்குகிறது. செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 14 வரையிலான காலம் மகாளய பட்ச காலம் என்று அழைக்கப்படுகிறது.
மகாளய பட்சத்தை தொடர்ந்து வரும் அமாவாசை மகாளய அமாவாசை எனப்படுகிறது. இது அக்டோபர் 14 ம் திகதி வருகிறது.
இந்த 15 நாட்களும் பித்ருக்களுக்கு உரிய காலம் என்பதால் இந்த நாட்களில் சுபகாரியங்கள் ஏதும் நடத்தப்படுவதில்லை. இந்த ஆண்டு மகாளய அமாவாசை சனிக்கிழமை வருகிறது.
அதாவது பெருமாள் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த புரட்டாசி கடைசி சனிக்கிழமையுடன் சேர்ந்து வருவதால் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அன்று விரதம் இருந்தால் முன்னோர்களின் ஆசியுடன், பெருமாளின் ஆசியையும் பெற முடியும்.
நதிக்கரையிலோ, கடற்கரையிலோ, முன்னோரை நினைத்து சிறிது எள்ளும், தண்ணீரும் தர்ப்பணம் செய்தாலே அவர்களது தாகமும், பசியும் அடங்கிவிடும் என்று கூறுகின்றன புராணங்கள்.
அவர்கள் மனம் குளிர அன்னதானம், வஸ்திர தானம், பழ வகைகள் தானம் போன்றவற்றைச் செய்தல் நன்மை பயக்கும்.
சூரிய பகவானை வணங்கி கிழக்கு பக்கம் நின்னு வலது கையில் எள் எடுத்து பின்பு தூய பாத்திரத்தில் தூய நீரை எடுத்து சூரியனை பார்த்து இறந்த முன்னோர்களை நினைத்து பெயர்களை கூறி எள் மீது நீர் விட்டு கீழே உள்ள பாத்திரத்தில் விட வேண்டும் பின்பு அந்த நீரை கடல், ஆறு, ஏரி, குளம் பகுதிகளில் விடலாம்.
இந்த வருடம் மகாளய பட்சம் அக்டோபர் 14ஆம் திகதி வருகிறது. முன்னோர்களையும், உற்றார், உறவினர், தெரிந்தவர்கள் என்று அனைத்து காருண்ய பித்ருக்களையும் நினைத்து வழிபாடு செய்யுங்கள். இயன்ற அளவு தானங்கள் செய்து முன்னோரது அருளாசியை பெறுங்கள்.