மகாளய பட்சத்தின் அவிதவா நவமி இன்றைய தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந் நாளில் பித்ரு தர்ப்பணம் செய்தால் மாங்கல்ய தோஷமும் களத்திர தோஷமும் நீங்கி மங்கள வாழ்வு கிடைக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இன்றையதினத்தில் சுமங்கலிப் பெண்கள் எவருக்கேனும் புடவை அல்லது ஜாக்கெட் மங்கல பொருட்கள் வழங்கலாம். இதனால் பித்ருக்களின் ஆசீர்வாதமும் சுமங்கலியாக இறந்துவிட்ட பெண்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும் எனவும் சொல்லப்படுகின்றது.
நம்முடைய குடும்பத்தில் சுமங்கலியாக இறந்தவர்களுக்காக, அவிதவா நவமி அனுஷ்டிக்கப்படுகிறது. மகாளய பட்சத்தின் பதினைந்து நாட்களும் மறைந்த முன்னோர்கள் நம் வீடு தேடி வருவார்கள். மகாளய பட்சத்தின் 9ஆம் நாள் அவிதவா நவமி தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாளில் நம் வீட்டில் சுமங்கலியாக மரணம் அடைந்த முன்னோரை நினைத்து, வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு.
அவிதவா நவமி நாளில், தன் கணவருக்கு முன்னதாக இறந்துவிட்டவர்களின் ஆன்மா சாந்தி அடையும் பொருட்டு, அவர்களை திருப்திப்படுத்தும் விதமாக, சுவாசினி என்று சொல்லப்படும் கன்னிப்பெண்களை வீட்டுக்கு அழைத்து, அவர்களுக்கு வஸ்திரம் அளித்து உணவளித்து மங்கலப் பொருட்கள் வழங்க வேண்டும்.
சுமங்கலி வழிபாடு செய்வது , திதி செய்வதற்கு சமமாக கருதப்படுகிறது. குடும்பத்தில், சுமங்கலியாக இறந்த பெண்களை நினைத்து செய்வது தான், சுமங்கலி வழிபாடு என்பதாகும் . திருமணமாகி, பல ஆண்டுகள் வாழ்ந்து, பூவும், பொட்டுமாக இறந்த பெண்மணியருக்கு, அவர்களின் திதிக்கு மறுநாள் சுமங்கலி வழிபாடு செய்ய வேண்டியது அவசியம் என்கின்றது சாஸ்திரம்.
பெண்ணானவள், தன் கணவருடன் சேர்ந்து வாழ்ந்து, தர்ம காரியங்கள் பலவற்றையும் செய்கிறாள். சடங்கு, சாங்கியம், தர்மம் உட்பட எல்லாவற்றையும் கணவன் செய்யும் போது, மனைவியும் உடன் இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
மனைவியானவள், சுமங்கலியாக இறந்துவிட்டாலும் கூட, அவளின் கணவர் செய்யும் எல்லாக் காரியங்களிலும் அவளை இருத்தியே, முன்னிலைப்படுத்தியே எல்லாம் செய்வதாகச் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
அப்போது அவிதவா என்று சாஸ்திரம் அழைக்கிறது. அவிதவா நவமி நாளில், தன் கணவருக்கு முன்னதாக இறந்துவிட்டவர்களின் ஆன்மா சாந்தி அடையும் பொருட்டு அவர்களை திருப்திப்படுத்தும் விதமாக சுவாசினி என்று சொல்லப்படும் கன்னிப்பெண்களை வீட்டுக்கு அழைத்து அவர்களுக்கு வஸ்திரம் தந்து அவர்களுக்கு உணவளித்து மங்கலப் பொருட்கள் தானமாக வழங்கவேண்டும்.
சுமங்கலியாக இறந்த பெண்கள், அம்பிகையின் வடிவமாய் மாறி நம் குடும்பத்தைக் காப்பர்கள். இந்த நல்ல நாளில் அவர்களுக்குரிய கர்மா காரியங்களைச் செய்வது சுமங்கலிகளின் பரிபூரண ஆசியைப் பெற்றுத்தரும் என நம்பப்படுகின்றது.
இதனால் குடும்பத்தில் நிம்மதி ஏற்படுவதுடன், சகல ஐஸ்வரியமும் கிடைக்கும். மேலும் தம்பதியர் ஒற்றுமை அதிகரிப்பதுடன் களத்திர தோஷமும், மாங்கல்ய தோஷமும் நீங்கி வாழ்க்கைத்துணையின் ஆயுள் நீடிக்கும் என்பது ஐதீகம்.