மகனை அச்சுறுத்துவதற்காக காவல்துறையினரை அழைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் Limoges (Haute-Vienne) நகரில் இடம்பெற்றுள்ளது. இங்கு வசிக்கும் 15 வயது சிறுவன் ஒருவனின் பெற்றோரிடம் இருந்து காவல்துறையினருக்கு அழைப்பு வந்திருந்தது. மகன் ஒழுக்கயீனமாக நடந்துகொள்கின்றார் என தொலைபேசியூடாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்றுள்ளனர். குறித்த வீட்டில் எந்தவொரு வன்முறையும் இடம்பெற்றிருக்கவில்லை. அதன் பின்னர் குறித்த சிறுவனின் பெற்றோரிடம் விசாரணை செய்தபொழுது குறித்த சிறுவனின் மேசையை துப்பரவாக வைத்திருக்கவில்லை என்பதற்காக அச் சிறுவனை அச்சுறுத்தும் வகையில் குறித்த அழைப்பை மேற்கொண்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், பின்னர் “இவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பது காவல்துறையினரின் வேலை இல்லை” என அறிவுரை கூறி அவ் இடத்தை விட்டு நகர்ந்தனர்.