போராடிப் பெற்ற சமாதானத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நாட்டின் சில விரோத சக்திகள் மற்றும் சமூகவிரோதிகள் செயற்படுபடுவதுடன் இனங்களுக்கு மத்தியில் அவநம்பிக்கை மற்றும் பிளவு மனப்பாங்கை ஏற்படுத்த முயற்சிப்பதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (டிசம்பர் 10) தெரிவித்தார்.
“எனவே, இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு எதிராக எழும் பேரபாயங்களை தடுப்பதற்காக, சாத்தியமான அச்சுறுத்தல்கள் பற்றிய ஆழமான பகுப்பாய்வுகளை மேற்கொள்வதும், தீங்கு விளைவிக்கும் விளைவுகளுக்கு எதிரான எதிர் நடவடிக்கைகளை முன்கூட்டியே தொடங்குவதும் எமது பாரிய பொறுப்பாகும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
நட்பு நாடுகளுக்கு இடையேயான புலனாய்வுப் பகிர்வானது இன்றியமையாத ஒன்றாகும் பயங்கரவாம் இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்ட நிலையில், மத தீவிரவாதத்தை பரப்புவதில் முனைப்பாக உள்ள அரசியல் மத தீவிரமயமாக்கல் மற்றும் அண்மைய வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மேற்கோள் காட்டிய பாதுகாப்பு செயலாளர், “நட்பு நாடுகளின் புலனாய்வு அமைப்புகளுக்கு இடையே புலனாய்வு தகவல்களை பகிர்ந்து கொள்வதானது பேரபாயங்களை எதிர்த்துப் போராடுவதில் ஒரு முக்கிய காரணியாக அமைகிறது” என்றார்.
சமகால சூழலில் உருவாகக்கூடிய சாத்தியமான அச்சுறுத்தல்களை மதிப்பிடுவதற்கு புவிசார் அரசியல் சூழலின் நிலையான மற்றும் தொடர்ச்சியான மதிப்பீடு மற்றும் பகுப்பாய்வு அவசியம் என்று அவர் தெளிவுபடுத்தினார்.
கொழும்பிலுள்ள தாமரைத்தடாக மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் இடம்பெற்ற பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை அதிகாரிகள் கல்லூரியின் 15 ஆவது கற்கை நெறிக்கான பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்பு செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
போரின்போது உயிர்த் தியாகம் செய்த படைவீரர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, மங்கள விளக்கேற்றல்களுடன் விழா ஆரம்பமானது.
பாடநெறியை வெற்றிகரமாத பூர்த்தி செய்த பட்டதாரிகள் பிரதம அதிதியிடமிருந்து விருதினைப் பெற்றுக்கொண்டதுடன் விசேட விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வின் போது, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை அதிகாரிகள் கல்லூரியின் வருடாந்த சஞ்சிகையான ‘The Owlet’ அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கமைய, முப்படையைச் சேர்ந்த 145 இளம் அதிகாரிகளும், பங்களாதேஷ், இந்தியா, இந்தோனேசியா, மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான், ருவாண்டா, சவுதி அரேபியா, செனகல் மற்றும் அமெரிக்கா ஆகிய 10 நட்பு நாடுகளைச் சேர்ந்த 18 அதிகாரிகளும் இதன்போது பட்டம் பெற்றனர்.
‘கொமன்டான்ட் ஆய்வுக் கட்டுரையை’ சிறந்த முறையில் சமர்ப்பித்தமைக்காக விங் கொமாண்டர் எச்.கே.வை.யு. சோமவன்சவுக்கு ‘தங்கப் போனா’ விருதை பிரதம அதிதியான ஜெனரல் குணரத்ன வழங்கினார்.
நாடுகளுக்கிடையிலான சிறந்த புலனாய்வு ஒத்துழைப்பின் அவசியம் குறித்து தொடர்ந்து உரையாற்றிய பிரதம அதிதி :
“இன்று பட்டம் பெறும் நேச நாட்டு அதிகாரிகள், புலனாய்வுப் பகிர்வின் அவசியம் மற்றும் முக்கியத்துவத்தை அந்தந்த நாடுகளுக்கு எடுத்துச் செல்வார்கள் என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கை” என்றார்.
வெளிநாட்டில் உள்ள புலிகளுக்கு ஆதரவான சக்திகள் மற்றும் அதன் மறைமுக ஆதரவான உள்ளூர் சக்திகள்
விடுதலைப் புலிகளின் கோரிக்கையான பிரிவினைவாத சித்தாந்தத்தை கொண்டிருப்பதனால் அவைகளால் கணிசமான அச்சுறுத்தல் ஏற்படுகின்றன. இதனை நாம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அண்மையில் முன்வைக்கப்ப்பட்ட குற்றச்சாட்டுகளின் மூலம் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம் என்றார்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகமானது பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை அதிகாரிகள் கல்லூரியியை அங்கீகரித்து. குறிப்பிடத்தக்க பகுதிகளை உள்ளடக்கிய முதுகலைப் பட்டம் வழங்கியதைக் குறிப்பிட்ட அவர், “பாடத்திட்டத்தை தொடரும் அதிகாரிகள், உயர் கல்வி அங்கீகாரத்துடன் கூடிய தொழில் வாண்மை விருத்தியினால் பெரிதும் பயனடைவார்கள்” என்று கூறினார்.
தொடர்ந்து உரையாற்றிய ஜெனரல் குணரத்ன :- இத்தகைய ஆளுமைகளை உருவாக்கியதற்காக பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை அதிகாரிகள் கல்லூரியின் அயராத முயற்சிக்காக முன்னைய மற்றும் தற்போதைய கட்டளைத் தளபதிகள், பிரதான பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பணிப்பாளர்களுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
அவர் முன்னாள் பணிப்பாளர் என்ற வகையில், எதிர்கால முயற்சிகளிலும் சாதனைகள் தொடர அதிகாரிகளுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் மகிமை மற்றும் மதிப்புகளை நிலைநிறுத்துவதற்கு அவர்கள் மேற்கொண்ட அயராத முயற்சிகளுக்காக பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை அதிகாரிகள் கல்லூரியின் கட்டளைத்தளபதி, அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பணியாளர்களை பாதுகாப்பு செயலாளர் பாராட்டினார்.
இந்த நிகழ்வில் கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை அதிகாரிகள் கல்லூரியின் கட்டளைத்தளபதி மற்றும் பணியாளர்கள், முன்னாள் தளபதிகள், முகாமைத்துவ சபை உறுப்பினர்கள், பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்களின் குடும்பங்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.