“அரிசி, சீனி உட்பட நுகர்வுப் பொருட்களுக்கு ஏற்பட்டிருந்த தட்டுப்பாடு மற்றும் பிரச்சினைகள் படிப்படியாகத் தீர்க்கப்பட்டுள்ளன. ஏனைய பிரச்சினைகளும் விரைவில் தீர்க்கப்படும். அந்தவகையில் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்யக்கூடிய சூழ்நிலை உருவாகும்.” என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் கோதுமை மா வழங்கும் திட்டம் இன்று (20) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஷ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கூட்டுறவுச்சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் பாவனையாளர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன கலந்து கொண்டார்.
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 80 ரூபா விலையில் மாதாந்தம் 15 கிலோ கோதுமை மாவை வழங்குவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் எடுத்திருந்தது. இதற்கு கடந்த வாரம் அமைச்சரவை அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே மேற்படி திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த திட்டம் ஆரம்பக்கட்டமாக நுவரெலியா – வட்டகொடை மடக்கும்புர தோட்டத்தில் வைபவ ரீதியாக இடம்பெற்றது.
இதில் குறித்த தோட்டத்தில் 71 குடும்பங்களுக்கு இந்த கோதுமை மா வழங்கப்பட்டன. அடுத்த கட்டமாக எதிர்வரும் காலங்களில் ஏனைய தோட்டங்களுக்கும் கோதுமை மா வழங்கப்படவுள்ளன.
இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
” தமிழ், சிங்களப் புத்தாண்டு காலப்பகுதியில் தட்டுப்பாடின்றி மக்களுக்கு நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கான சூழலை உருவாக்குவதற்காக நிதி அமைச்சர் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டது.
அந்த குழு வாராந்தம் கூடி நிலைமைகளைச் சீர்செய்து வருகின்றது. கடந்த காலங்களிலிருந்த முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளன. அரிசி, சீனி மற்றும் சமையல் எரிவாயுவுக்கு இருந்த தட்டுப்பாட்டு நிலை சரிசெய்யப்பட்டுள்ளது.
ஏனைய பொருட்களுக்கு இருக்கும் தட்டுப்பாட்டு நிலையும் சீர்செய்யப்படும். ஆக, எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் நியாயமான விலைக்குப் பொருட்களை வாங்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டே செயற்பட்டு வருகின்றோம்.
பெருந்தோட்ட மக்களுக்கு தற்போது மானிய விலையில் கோதுமை மா வழங்கப்படுகின்றது. எதிர்காலத்தில் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது சம்பந்தமாகவும் ஆராயப்படும். தேயிலை ஏற்றுமதி மூலம் எமக்கு அந்நிய செலாவணி வருகின்றது. உலக சந்தையில் சிறந்த கேள்வி உள்ளது. இதற்கு பெருந்தோட்டத் தொழிலாளர்களே பங்களிப்பு வழங்கிவருகின்றனர்.
அதேவேளை, ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க, சந்திரிக்கா அம்மையார், மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன போன்ற ஜனாதிபதிகளின்கீழ் தொண்டமான் குடும்பம் செயற்பட்டுள்ளது.
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் மலையக மக்களுக்கு ஆற்றிய சேவைகளை மறந்துவிடமுடியாது. ரமேஷ் உள்ளிட்டவர்கள் அதற்கு உறுதுணையாக நின்றனர். தற்போது சிறந்த படித்த இளம் தலைவராக ஜீவன் தொண்டமான் செயற்பட்டுவருகின்றார். ” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஷ்வரன், தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் செயலாளர், நுவரெலியா மாவட்டச் செயலாளர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் அனுஷியா சிவராஜா, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், கொட்டகலை, நுவரெலியா, அக்கரப்பத்தனை, நோர்வூட் ஆகிய பிரதேச சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகள், கட்சி முக்கியஸ்தர்கள், அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.