பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித மற்றும் மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க ஆகியோரை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (26) ஆஜர்படுத்தப்பட்ட போதே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 23ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பொலிஸாரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரும் இணைந்து ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித மற்றும் மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க ஆகியோரை கைது செய்தனர்.
மின்சாரக் கட்டணத் திருத்தத்தை அமுல்படுத்தப் போவதில்லை என்ற கூட்டுத் தீர்மானம் தொடர்பில், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மூவர் பின்னர் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்ததை தொடர்ந்து அதன் உறுப்பினர்கள் இருவரை கடந்த 20ஆம் திகதி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க இன்று அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது பதில் கோட்டை நீதவான் முன்னிலையில், பயன்பாட்டு ஆணைக்குழுவின் உறுப்பினர் கலாநிதி மொஹான் சமரநாயக்கவினால் அடையாளம் காணப்பட்டார்.
அத்துடன், ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித இன்று இணையவழி ஊடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினார்.