தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் மான் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மிதிலைச்செல்வி ஸ்ரீ பத்மநாதனுடன் வைத்தியர் அருச்சுனா அநாகரிகமாக நடந்து கொண்டதுடன், அதனை தனது முகநூலில் நேரலையாகவும் பதிவிட்டுள்ளார்.
குறித்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். அந்நிலையில் தமிழ் மக்கள் கூட்டணியின் சக வேட்பாளரான வரதராஜன் பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
பெண்கள் தேர்தல் அரசியலுக்கு வரவேண்டும் பெண்களுக்கான ஒதுக்கீடுகள் 50% வரை அதிகரிக்கப்பட வேண்டும் என்று பெண்களுக்கான உரிமைக் குரல்கள் அனைத்து தரப்பினராலும் வலியுறுத்தப்படுகின்றது.
இக்காலத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் பெண் வேட்பாளராக போட்டியிடுகின்ற மிதிலைச்செல்வி அக்கா தனது தேர்தல் பரப்புரையின் போது வைத்திய கலாநிதி அர்ஜுனா அவர்களுக்கு வழங்கிய தேர்தல் கால துண்டு பிரசுரத்தினை அர்ஜுனா அவர்கள் தனது திருவாயினையும் தன்னுடைய சாப்பாட்டு கோப்பையினையும் துடைக்கின்ற வீடியோ காட்சியினை அவரே தன்னுடைய முகப்பு பக்கத்தில் ஒளிபரப்புச் செய்து தனது வழமை போல் தனது பண்புகளையும் வக்கிரத்தை காட்டியுள்ளார்.
இது மிகவும் கண்டிக்கத்தக்கது தன்னை ஒரு மேதாவியாகவும் தானே அநீதிகளுக்கு எதிராக கிளர்ந்திருக்கின்ற ஒரு பெரும் சக்தியாகவும் காட்டிக்கொள்ள முயற்சிக்கின்ற அர்ஜுனா அவர்கள் புரிந்த இந்த செயலானது நீதியானதா?
தேர்தலில் போட்டியிடுகின்ற ஒரு பெண் வேட்பாளர் அவமதிக்கப்பட்ட இவ்விடயம் தொடர்பில் பெண் உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்ற அதே நேரம் பெண்கள் தேர்தல் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்துகின்ற பெண்கள் சார் சமூக மட்ட அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் வகிபாகம் என்ன ? அவர்கள் எடுக்கப் போகின்ற நடவடிக்கைகள் என்ன ? என கேள்வி எழுப்பியுள்ளார்.