புவியின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டுமாயின், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல் மற்றும் நிலையான சக்திவலு தீர்வுகளை ஊக்குவிப்பது அவசியம் என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகளின் சக்திவலு தொடர்பான அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது கூட்டத் தொடரின் ஓர் அங்கமாக, நியூயோர்க் நகரில் நேற்றைய தினம் (24) இந்தச் சக்திவலு தொடர்பான அரச தலைவர்கள் மாநாடு ஆரம்பிக்கப்பட்டது. “அனைவராலும் கொள்வனவு செய்யக்கூடியதும் நம்பிக்கை மிகுந்ததுமான நிலையான சக்திவலுவைப் பெற்றுக்கொள்வதற்குரிய வாய்ப்பை உறுதிப்படுத்தல்” எனும் தொனிப்பொருளின் கீழ், இந்த மாநாடு இடம்பெற்றது.
மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, இந்தப் பூமியின் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு, இவ்வுலகில் வாழும் அனைத்து மக்களும் முன்னுரிமை அளிக்க வேண்டு என்று, மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
மனிதர்களால் ஏற்படுத்தப்படும் சுற்றுச்சூழல் அழிவுகள் காரணமாக ஏற்படும் காலநிலை மாற்றங்களால் பூமிக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை, தொடர்ந்தும் நாம் புறக்கணிக்கலாகாது. எதிர்வரும் சில தசாப்தங்களுக்குள் இவ்வாறான அச்சுறுத்தல்களைக் குறைத்துக்கொள்ள வேண்டுமாயின், முழு உலகமும், சுத்தமான சக்திவலுக்களை நோக்கிச் செல்ல வேண்டியது அத்தியாவசியமாகிறது என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மிகச் சிறந்த நிலையான சக்திவலும் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை நோக்கிப் பயணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, அதற்கான இயலுமையுள்ள அனைத்து நாடுகளிடமும் கேட்டுக்கொண்டார்.
நிலையான சக்திவலு அபிவிருத்திக்கு, இலங்கையானது அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. 2030ஆம் ஆண்டுக்குள், நாட்டின் சக்திவலுத் தேவையின் 70 சதவீதத்தை, மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவலுக்கள் ஊடாகப் பெற்றுக்கொள்வதே இலக்காக உள்ளது. அத்துடன், படிம எரிபொருட்களிலிருந்து படிப்படியாக விலகி, காபனேற்றத்தைக் குறைத்தல் மற்றும் 2050ஆம் ஆண்டுக்குள் காபன் மாசற்ற நாடாக இலங்கையை உருவாக்குவதற்கான திட்டமிடல்களுடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
புதிய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையங்களை உருவாக்காதிருக்கும் நிலைப்பாட்டில் இலங்கை உறுதியாக இருக்கின்றது என்றும் காலநிலை மாற்றங்கள் தொடர்பான ஐ.நா மாநாட்டுக்குப் பெற்றுக்கொடுக்கப்படும் பங்களிப்பு அதற்குப் பிரதிபலிப்பாக இருக்கின்றது என்றும் எடுத்துரைத்த ஜனாதிபதி இலங்கையானது, புதிய நிலக்கரி வலுவற்ற சக்திவலுக் கூட்டமைப்பின் இணைத் தலைவராக இருக்கின்றமை குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
நாடு முழுவதிலும், 7,000 சூரியசக்தி மூலமான மின்னுற்பத்தி வேலைத்திட்டங்களை அமுல்படுத்தத் தயாராக இருப்பதாகவும் அவற்றில் முதலீடு செய்வதற்காக, இலங்கைத் தொழிற்றுறையினர், சிறு வியாபாரிகள் மற்றும் சமூக நிறுவனங்களை ஊக்குவித்து வருவதாகவும், நாட்டுக்குள் மிகப் பெரிய காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை, அண்மையிலேயே ஆரம்பித்து வைத்ததாகவும், ஜனாதிபதி எடுத்துரைத்தார்.
எதிர்வரும் சில தசாப்தங்களுக்குள், மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவலுக்கள், விசேடமாக சூரியசக்தி, காற்றாலை மற்றும் உயிரி எரிபொருள் போன்ற பாரியளவிலான முதலீடுகளை இலங்கை வரவேற்கிறது என்றும், ஜனாதிபதி தெரிவித்தார்.