பங்காளிக்கட்சிகளின் அழுத்தத்தால் சில தீர்மானங்களை மீளப்பெற வேண்டிய நிலைமை கடந்த காலத்தில் அரசுக்கு ஏற்பட்டதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இனி அவ்வாறு நடக்காது என்றும், 2022 முதல் கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் அரசு எதிர்ப்பார்த்த இலக்கை நோக்கி கடந்த இரண்டு வருடங்களில் பயணிக்க முடியாமல்போனதாகவும் அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
எனினும் 2022 ஆம் ஆண்டு முதல் மக்களின் எதிர்ப்பார்ப்புகள் உரிய வகையில் நிறைவேற்றப்படும்.அதற்காக கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும் என் தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதி தலைமையில் இது சம்பந்தமாக தீர்க்கமான கலந்துரையாடலும் இடம்பெற்றதாகவும் தெரிவித்தார்.
அதன்படி நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கடுமையான தீர்மானம் எடுக்கப்படும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் இடம்பெறுமானால் வேலையை நிறுத்தியாவது, அந்த திட்டத்தை நாம் நிச்சயம் செயற்படுத்துவோம் என்றும் கூறினார்.
அதேவேளை எமது தோழமைக்கட்சிகள் மற்றும் சில குழுக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் பிரகாரம் சில தீர்மானங்களை நாம் மீளபெற்றோம். இது பாரிய தவறாகும் என தெரிவித்த திலும் அமுனுகம , கிழக்கு முனையத்துக்கு எதிர்ப்பை வெளியிட்டனர். இன்று என்ன நடக்கின்றது? கிழக்கு முனையம் மேம்படுத்தப்படவில்லை. முதலீட்டாளர்களும் வரவில்லை.
இதனால் நாட்டுக்குதான் பாதிப்பு என்றும் தெரிவித்தார். எனவே, இனிவரும் காலங்களில் கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும். கூட்டு பொறுப்பை ஏற்காதவர்கள் அவர்களின் வழியில் பயணிக்கலாம் என தெரிவித்த இராஜாங்க அமைச்சர் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் என்பது எமக்கு பிரச்சினை கிடையாது எனவும் கூறினார்.