கொரோனா வைரஸ் நாளுக்கொரு திடீர் மாற்றத்தை வெளிப்படுத்துக்கொண்டே இருக்கிறது. சீனாவில் முதலில் தோன்றிய கொரோனா வைரஸ், பின்னர் தென்னாப்பிரிக்க கொரோனா வைரஸ் ஆகவும், பிரேசில் வகை கொரோனா வைரஸாகவும், பிரித்தானிய வகை கொரோனா வைரஸாகவும் பல்வேறு திடீர் மாற்றங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வகையில், தற்போது புதிதாக பிலிப்பைன்ஸ் வகை கொரோனா வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அந்த பிலிப்பைன்ஸ் வகை வைரஸ், தற்போது பிரித்தானியாவுக்குள்ளும் நுழைந்துவிட்டதாக இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
P.3 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கொரோனா வைரஸ், தென்னாப்பிரிக்க, பிரேசில் மற்றும் பிரித்தானிய வகை கொரோனா வைரஸ்களில் காணப்படும் திடீர் மாற்றங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.இங்கிலாந்தில் இரண்டு பேர் இந்த புதிய பிலிப்பைன்ஸ் வகை கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் சமீபத்தில் பிலிப்பைன்சுக்கு சென்று வந்துள்ளார். மற்றொருவரைக் குறித்து விசாரணை நடைபெறுகிறது.பிலிப்பைன்ஸ் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள இருவரும், ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்களா என்பது தெரியவில்லை.இவ்விருவருடன் தொடர்பிலிருந்த அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டு, தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.