வெளிநாடுகளில் அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்து உயிரிழக்கும், சிறையில் அடைக்கப்படும் அல்லது காணாமல் போகும் இலங்கை தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு உள்நாட்டில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகக் கல்வியை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல், அமைச்சர் விஜித ஹேரத், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் மற்றும் ஜனாதிபதி நிதிய செயலாளர் தலைமையில் நேற்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
“கல்வியில் யாரையும் கைவிடக் கூடாது” என்ற கொள்கையின் கீழ், அனர்த்தங்களை எதிர்கொள்ளும் வெளிநாட்டு தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் நிதி உதவி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் இளைஞர், யுவதிகளுக்கு வெளிநாட்டு மொழிகள் கற்பதற்கு நிதி உதவி வழங்குவதும், கிராமப்புறங்களை இலக்காகக் கொண்டு சுற்றுலாத் துறையில் திறமையான தொழிலாளர் படையை உருவாக்குவதும் இந்தத் திட்டத்தின் நோக்கங்களில் அடங்கும்.
இக்கலந்துரையாடலில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரிவு மேலதிகச் செயலாளர், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக தலைவர் மற்றும் சுற்றுலா, ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

