ரமலான் பண்டிகை நெருங்கும்நேரத்தில் இஸ்லாமிய முறைப்படி கோழிகளைக் கொல்வதற்கு பிரான்ஸ் நாட்டில் தடை விதிக்கப்பட உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளதால் பிரான்ஸ் நாட்டு இஸ்லாமியர்கள் எரிச்சலடைந்துள்ளார்கள்.
பிரான்ஸில் இந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து, இஸ்லாமிய முறைப்படி (ஹலால்) கோழிகளைக் கொல்வதற்கு தடை விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஹலால் என்னும் இஸ்லாமிய முறைப்படி, கோழிகளின் கழுத்திலுள்ள இரத்தக்குழாய் மற்றும் சுவாசக்குழாயை துண்டிப்பதன் மூலம் கோழிகள் கொல்லப்படும். இது மனிதத்தன்மையற்ற செயல் என சில விலங்குகள் நல ஆர்வலர்கள் வாதிடுகிறார்கள்.
எனினும் ஐரோப்பிய வழக்கம் என்னவென்றால், கோழிகளுக்கு stun gun என்னும் கருவியின் மூலம் அதிர்ச்சி கொடுத்து, அவற்றை செயலிழக்கச் செய்து, அதற்குப் பின் கோழிகளைக் கொல்வதாகும்.
ஆனால், எந்த முறையில் கொல்வது கோழிக்கு அதிக வலியை ஏற்படுத்தும் என்பது குறித்து இன்னமும் கருத்துவேறுபாடுகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன
இந்நிலையில், இந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து, இஸ்லாமிய முறைப்படி (ஹலால்) கோழிகளைக் கொல்வதற்கு தடை விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், ரமலான் மாதம் நெருங்கி வரும் நேரத்தில், பிரெஞ்சு வேளாண்மை மற்றும் உணவு அமைச்சகத்தின் சுற்றறிக்கை இஸ்லாமிய சமூகத்துக்கு எதிர்மறையான செய்தி ஒன்றை அளித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள், மக்களை அவர்களுடைய மதத்தை சுதந்திரமாக பின்பற்றுவதிலிருந்து தடுக்கக்கூடியவையாக உள்ளன என்றும் கூறியுள்ளது.
அத்துடன், அடிப்படை உரிமைகளை மீட்பதற்காக தாங்கள் சட்ட ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ள இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள்.