நான் ஒருபோதும் வன்முறையை ஆதரித்ததில்லை ஊக்குவித்ததில்லை அல்லது வன்முறையை தூண்டக்கூடிய சிந்தனைகளிற்கு ஆதரவளித்ததில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார் .
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் பிரதமர் சாணக்கியன் குறித்து நாடாளுமன்றத்தில் விடுத்த அறிக்கைக்கு பதிலளித்து பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் சாணக்கியன் இதனை தெரிவித்துள்ளார்.
அமைதி ஐக்கியம் அனைவரையும் உள்ளடக்குதல் ஆகியவற்றை வலியுறுத்தி வரும் அதேவேளை மக்களின் தேவைகள் அபிலாசைகள் குறித்து நான் குரல்கொடுத்து வருகின்றேன் என சாணக்கியன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தாங்கள் தெரிவு செய்த பிரதிநிதிகள் தங்கள் தேவைகளை துயரங்களை அபிலாசைகளை கருத்தில் எடுக்க தவறிவிட்டனர் என கருதியதன் காரணமாகவே மக்கள் வன்முறையில் ஈடுபட்டனர் என்றே நான் தெரிவித்தேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதோடு நான் வன்முறைகளிற்கு ஆதரவளிக்கின்றேன் என்ற விதத்தில் எனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதமருக்கு சாணக்கியன் கடிதம் அனுப்பியுள்ளார்.