எரிவாயு வெடிப்புச் சம்பங்களின் பின்னணியில் சூழ்ச்சிகள் இருக்கின்றதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இது சம்பந்தமாக ஏற்கனவே இரகசியமான விசாரணைகளை நடத்தி வருவதாகவும் பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ(Johnston Fernando) தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் சம்பந்தமான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார். குருணாகல் மலியதேவ பெண்கள் பாடசாலையின் இரண்டு மாடிகளை கொண்ட புதிய கட்டடத்தை இன்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்ச பாடசாலையின் புதிய கட்டடத்தை திறந்து வைத்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் ஜோன்ஸ்டன்,
இந்த புதிய ஆண்டில் நேர்மறையாக சிந்தித்து முன்நோக்கி செல்ல வேண்டும். கோவிட் தொற்று நோய் காரணமாக பல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிட்டது. அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது.
இதன் காரணமாக பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. எரிவாயு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் நடக்கின்றன. எரிவாயு வெடிப்புச் சம்பவங்களின் பின்னணியில் சூழ்ச்சிகள் இருக்கலாமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு 7 இல் எரிவாயு வெடிப்பதில்லை. வடக்கு மாகாணத்தில் எரிவாயு வெடிப்பதில்லை. கண்டி, குருணாகல் மாவட்டங்களில் எரிவாயு வெடிப்பதில்லை.
இதனால், எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் குறித்து நாம் உரிய விசாரணைகளை நடத்த வேண்டும். ஏற்கனவே ஜனாதிபதி எரிவாயு வெடிப்பு சம்பந்தமாக இரகசியமாக தேடி வருகிறார்.
எரிவாயு வெடிப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் ஒரு வித சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எரிவாயுவை பயன்படுத்த மக்கள் அஞ்சுகின்றனர். அடுத்த சில வாரங்களில் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன் எனவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.