பாலியல் விஷயத்தில் மனைவியின் விருப்பங்களை புரிந்துகொள்ள இயலாத ஆண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் மனைவியை முறையாக அணுகத் தெரியாதவர்களாகவும், வாழ்க்கையை ருசிக்கத் தெரியாதவர்களாகவும் ஆகிவிடுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் பொதுவாக படுக்கை அறையில் செய்யும் தவறுகள் என்னென்ன தெரியுமா?
தவறு: மனைவி எப்போதுமே கணவரிடம் அன்பையும், பாசத்தையும் தான் எதிர்பார்ப்பார். பாலியல் செயல்பாடுகளில் ஆர்வம் கொள்வதில்லை.
நிஜம்: கணவருக்கு பாலியல் ஆர்வம் இருப்பதுபோல் மனைவிக்கும் இருக்கும். பசி, தாகம் போன்று பாலியல் செயல்பாடும், திருப்தியும் மனைவிக்கு அத்தியாவசியமானதுதான். அதை முழுமையாக நிறைவேற்ற வேண்டிய கடமை கணவருக்கு இருக்கிறது. அதே நேரத்தில் அன்பும், பாசமும்தான் பாலியல் செயல்பாடுகளுக்கான எரிபொருள் போன்றது. அதனால் அன்பு நிறைந்த தம்பதியினரே பாலியல் செயல்பாடுகளின் எல்லையை அடிக்கடி எட்டுகிறார்கள்.
தவறு:பாலியல் செயல்பாடுகளில் ஈடுபட அதிகமான தயாரெடுப்புகள் ஆண்களுக்கு அவசியம்.
நிஜம்: மனைவியுடன் பாலியல் தொடர்பில் ஈடுபட அதிகமான தயாரெடுப்புகள் ஆண்களுக்கு தேவையில்லை. தம்மால் இயலாமல் போய்விடுமோ என்ற பதற்றமே அதிக தயாரெடுப்பிற்குரிய காரணமாக இருக்கும். போட்டித் தேர்வுக்கு போன்று இதற்கும் தயாராகவேண்டியதில்லை. பதற்றம் கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை. இயல்பான அணுகுமுறையே முழுமையான தாம்பத்யத்திற்கு தேவை. ஆண்களின் தேவையற்ற தயாரெடுப்புகள் முரண்பாடான சூழலை உருவாக்கி, மனைவியை படுக்கையில் மனங்கோண வைத்துவிடும்.
தவறு:மனைவியுடன் படுக்கையில் படுத்துக்கொண்டே அதிக நேரம் செல்போனை துழாவிக்கொண்டிருப்பது மற்றும் சாட்டிங் செய்வது.
நிஜம்: படுக்கை அறை சூழல், தம்பதிகளின் சுவாரஸ்யமான பேச்சு, அவர்களது தோற்றப்பொலிவு போன்ற அனைத்துமே நிறைவான தாம்பத்ய தொடர்புக்கு மிக அவசியம். மனைவி பாலியல் விருப்பத்தோடு நல்ல மனநிலையில் இருக்கும்போது கணவர் செல்போனில் கவனத்தை செலுத்திக்கொண்டிருந்தால் அது படுக்கை அறை சூழலை கெடுத்துவிடும். மனைவிக்கு எரிச்சலும், சந்தேகமும் தோன்றிவிடும். பெரும்பாலான குடும்பங்களில் மகிழ்வான தாம்பத்யத்திற்கு செல்போன் பெரும் இடைஞ்சலாக இருந்துகொண்டிருக்கிறது.
தவறு:தாம்பத்யத்தில் மனைவியின் விருப்பங்களுக்கு மதிப்பு கொடுக்கவேண்டியதில்லை.
நிஜம்: பாலியல் செயல்பாட்டில் கணவன்- மனைவி இருவரின் உடலும்- மனமும் ஒன்றிணைகிறது. ஒவ்வொரு முறை இணைவதும் வசந்தமான நினைவுகளாக இருக்கும். கட்டிப்பிடித்தலில் இருவரும் சமநிலையை கடைப்பிடிக்கிறார்கள். இருவரும் சமமாக இணைந்தால்தான் கட்டிப்பிடித்தல் முழுமைபெறும். ஆனால் பாலியல் செயல்பாட்டின்போது அந்த சமநிலையில் ஏற்றத்தாழ்வு உருவாகிவிடுகிறது. மனைவியின் உணர்வுகளுக்கும், விருப்பங்களுக்கும் உரிய மதிப்பை அளிக்காமல், “என் உடல்.. எனது ஆசை.. எனது இன்பம்..எனக்கு மட்டுமே திருப்தி..” என்ற நிலைக்கு கணவன் சென்றுவிடக்கூடாது. இப்படிப்பட்ட மனோநிலை கொண்டவர்கள் தாம்பத்யத்தில் மனைவியின் விருப்பங்களுக்கு உரிய மரியாதையை வழங்கமாட்டார்கள். தாம்பத்ய செயல்பாடுகளில் நிர்பந்தம், திணிப்பு, அடிமைத்தனம், அறுவறுப்பு, சுயநலம் போன்ற எதற்கும் ஆண்கள் இடம்கொடுத்துவிடக்கூடாது.
தவறு:ஆண்கள் டென்ஷனை தீ்ர்க்கும் மருந்து போல் மனைவியை பாலியலுக்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
நிஜம்: ஆண்களுக்கு ஏற்படும் பல பாதிப்புகளுக்கு திருமணம்தான் தீர்வாக இருக்கும் என்ற தவறான கருத்து சமூகத்தில் நிலவியதுண்டு. தினசரி வாழ்க்கையில் அனுபவிக்கும் பிரச்சினைகளுக்கும் மருந்துபோல் பாலியல் இன்பம் தீர்வு தரும் என்ற நம்பிக்கையும் சிலருக்கு இருக்கிறது. சிலர் தூக்கத்திற்கான மருந்துபோல் பாலியல் செயல்பாட்டை பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் கணவன்-மனைவி இடையேயான அன்பை பெருக்கவும், வாழ்க்கையில் ஆனந்தத்தை ஏற்படுத்தவும் அத்தியாவசியமான தேவையாக பாலியல் இருக்கிறது. அதே நேரத்தில் நெருக்கடிகளில் இருந்து மனதை மீளவைக்கும் சக்தியும், கணவன்-மனைவி இடையேயான சின்னச்சின்ன சண்டைகளை தீர்த்துவைக்கும் சக்தியும் பாலியல் செயல்பாட்டிற்கு இருக்கிறது. மருந்தை நோய் வந்தால் மட்டுமே பயன்படுத்துவோம். அதுபோல் கணவர் தாம்பத்யத்தை கசப்பு மருந்துபோல் ஆக்கி மனைவியை முகம் சுளிக்கவைத்துவிடக்கூடாது. தம்பதிகளுக்கு எல்லா காலகட்டத்திலும் பாலியல் இன்பம் தேவை.
தவறு:உடல் சுத்தம் இல்லாமல் படுக்கை அறையில் மனைவியை அணுகுவது.
நிஜம்: பெரும்பாலான ஆண்கள் உடல் சுத்தத்தோடு படுக்கை அறைக்கு செல்வதில்லை. உடல் சுத்தம் என்பது காலையில் அலுவலகத்திற்கு செல்லும்போது மட்டுமே அவசியம் என்று நினைக்கிறார்கள். படுக்கைக்கு செல்லும்போது உடல் சுத்தமும், மனஉற்சாகமும் மிக அவசியம். ஆண்கள் அலட்சியத்தால்தான் உடல் சுத்தத்தை பேண மறுக்கிறார்கள். ஆண்களில் பெரும்பகுதியினர் ‘‘படுக்கைக்கு வரும்போது நான் இப்படித்தான் இருப்பேன். நீதான் சுத்தமாக குளித்து அலங்காரம் செய்துகொண்டு அசத்தலாக வரவேண்டும்’’ என்பதுபோல் மனைவியிடம் பேசுகிறார்கள். மனைவி அழகாக இருக்கவேண்டும் என்று கணவர் விரும்புவதுபோல், கணவர் அழகாக இருக்கவேண்டும் என்று மனைவியும் விரும்புவார் என்ற நிஜம் பெரும்பாலான ஆண்களுக்கு புரிவதில்லை. இதில் இருக்கும் கசப்பான உண்மை என்னவென்றால், உடல் சுத்தம் இல்லாத கணவரை மனைவி அரைகுறை மனதோடுதான் அனுசரிப்பார். அது முழு இன்பம் தராது.