பாம்பு விஷத்தை முறியடிப்பதற்கான தடுப்புகள் மருந்து இல்லாமையால் இதுவரையில் 20 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் கிஷாந்த தசநாயக்க தெரிவித்தார்.
அடுத்த மூன்று வாரங்களுக்குள் மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சில மருந்துகளுக்குத் தற்போது பயன்படுத்தப்படும் மாற்று மருந்துகளும் அடுத்த 3 வாரங்களுக்குள் மருத்துவமனை களஞ்சியங்களில் இருந்து படிப்படியாக குறைவடையவுள்ளது என்றும் அவர் கூறினார்.
வைத்தியசாலை களஞ்சியங்களில் இருந்து 20 வீதமே மருந்துகள் வழங்கப்படுகின்றன என்றும், அவையும் எதிர்வரும் காலங்களில் நிறைவடையவுள்ளன என்றும் மருத்துவர் கிஷாந்த தசநாயக்க சுட்டிக்காட்டினார்.
தற்போது வைத்தியசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட நோயாளர்களுக்கு மாத்திரமே மருந்துகள் வழங்கப்படுகின்றன என்றும், வயதான நோயாளிகளை விட இளம் நோயாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.