பாடசாலை மாணவர்களுக்கிடையிலான தேசியமட்ட குத்துச்சண்டை போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை மாணவிகள் இந்தியா செல்வதற்கான விமான பயண சீட்டுக்கான நிதி வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த குத்துச்சண்டை போட்டியில் வவுனியா சிறீராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலயம் மற்றும் புதுக்குளம் மகாவித்தியாலயம் ஆகியவற்றை சேர்ந்த மாணவிகள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்று சாதனை படைத்திருந்தனர்.
அவர்கள் இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் இடம்பெறவுள்ள குத்துச்சண்டை பயிற்சி முகாமில் பங்குகொள்வதற்காக தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் வறுமை நிலையிலுள்ள அவர்களுக்கு இந்தியா செல்வதற்கான விமானபயண சீட்டுக்கான நிதி உதவி இன்றைய தினம் (12-03-2023) வழங்கி வைக்கப்பட்டது.
தமிழ்விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில் சுவிஸ் தமிழ்சேவை நிறுவனத்தின் அனுசரணையில் மாணவிகள் மூவருக்கும் தலா 50 ஆயிரம் வீதம் 1,50,000 ரூபாய் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் தமிழ்விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், ஆசிரிய ஆலோசகர் ரவி, சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.