இந்திய மாநிலம் கேரளாவில் 12-ஆம் வகுப்பு மாணவி வீட்டின் அருகில் உள்ள முட்புதரில் மார்பில் கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், அவரது குடும்பத்தாரை உலுக்கியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பள்ளிவாசல் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ். இவரது 17 வயது மகள் ரேஷ்மா இடுக்கி சண் வாலி மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பில் படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பாடசாலை முடிந்து கிளம்பிய மாணவி, வீடு வந்து சேராத நிலையில் மாணவியின் பெற்றோர் இடுக்கி வெள்ளத்தூவல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகார் அளித்த பின்பு மாணவியின் உறவினர்கள் மற்றும் காவல்துறையினர் மாணவியை தேடிவந்த நிலையில்,
மாணவி வீட்டின் அருகில் பள்ளிவாசல் பகுதியில் உள்ள முட்புதரில் நெஞ்சில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இந்த நிலையில் அங்கு நடத்திய சோதனையில் ஒரு மொபைல் போன் அதன் பேட்டரியை கழட்டி மாற்றிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இந்த போன் யாருடையது என்பது குறித்து விசாரித்தபோது மாணவியின் உறவினரான அனு என்பவருடையது என தெரியவந்தது.
மாணவி பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய பாதையில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி பொலிசார் நடத்திய விசாரணையில் மாணவியுடன் அனு நடந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அனுவை எங்கு தேடியும் இதுவரையிலும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், அவரை கண்டுபிடிக்கும் பணியில் பொலிசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறும்போது மாணவியை அனு கொலை செய்து விட்டு தமிழகத்துக்கு தப்பி சென்றிருக்கலாம் அல்லது இந்த கொலைக்கு பிறகு அனு தற்கொலை செய்திருக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர்.