2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றியில் பாகிஸ்தான் அணியை வென்று இறுதிப்போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது.
இந்த போட்டி நேற்றைய தினம் கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
மழைக்காரணமாக 42 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 42 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 252 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பில் முகமது ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 86 ஓட்டங்களை பெற்றதுடன் அப்துல்லா ஷபீக் 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இலங்கை அணி சாரிபில் பந்து வீச்சில் மதீஷ பத்திரன 3 விக்கெட்டுக்களை பிரமோத் மதுஷன் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் 253 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை 42 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 91 ஓட்டங்களையும் சரித் அசலங்கா 49 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 48 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் இப்திகார் அகமது 3 விக்கெட்டுக்களை ஷஹீன் அப்ரிடி 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இந்த வெற்றியினை அடுத்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (17-09-2023) நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் இலங்கை அணி மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.