முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க ஆகியோருக்கு, 2023 செப்டம்பரில் லண்டன், வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகம் அனுப்பிய அழைப்பிதழின் நகலை ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜான் ராஃப்டெரி கையொப்பமிட்ட அழைப்பிதழ், ஜனாதிபதி விக்ரமசிங்க மற்றும் முதல் பெண்மணிக்கு அனுப்பப்பட்டது.
மேலும், 2023 செப்டம்பர் 22 அன்று வோல்வர்ஹாம்டனில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பட்டமளிப்பு மதிய உணவு விருந்தில் அவர்கள் பங்கேற்பது குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி இந்த விடயத்தை பகிர்ந்துள்ளது.
அதேநேரம், ரணில் விக்ரமசிங்க அரசு நிதியை முறையற்ற முறையில் பயன்படுத்தவில்லை என்று கட்சி வலியுறுத்தி, குற்றச்சாட்டுகளை அவர் முன்பு மறுத்ததை மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது.

