பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முற்று முழுதாக நீக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் தமது தமது கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் எழுத்து மூல ஆவணத்தை எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனிடம் இன்று நேரில் கையளித்தார்.
இந்த விடயம் தொடர்பில் சுமந்திரன் எம்.பி. ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்,
“பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் நாம் கையெழுத்து வேட்டையை முன்னெடுத்து வருகின்றோம். இந்த நடவடிக்கைக்கு மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், கல்வியியலாளர்கள், அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள், மாணவர்கள் மற்றும் மூவின மக்கள் தங்கள் ஆதரவை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முற்று முழுதாக நீக்கப்பட்டு, சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடைய சட்டமொன்று அதனைப் பிரதியீடு செய்ய வேண்டுமென்ற தமது கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் எழுத்து மூல ஆவணத்தை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ, இன்று காலை என்னிடம் கையளித்தார்.
நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் வைத்து இந்த ஆவணத்தை அவர் என்னிடம் கையளித்தார்.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியுதீன், வேலுசாமி இராதாகிருஷ்ணன், பழனி திகாம்பரம், மயில்வாகனம் உதயகுமார் மற்றும் புத்திக பத்திரண ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.