பதுளை மாவட்டத்தின் பசறை – லுணுகல வீதியில் 13ஆம் தூணுக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
மேலும் ஒரு பாதையை மட்டும் திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்பு இதே இடத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் வீதியை விரைவில் இயல்பு நிலைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனிடையே பசறை, ஹெலபொல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, அங்கு வசிக்கும் மூன்று குடும்பங்களை வெளியேற்றி, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப பசறை பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பலத்த மழையை கருத்தில் கொண்டு, பல மாவட்டங்களின் பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையின்படி, அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பதுளை மாவட்டத்தில் ஹாலி எல, எல்ல, பதுளை, பசறை, குருநாகல் மாவட்டத்தில் நாரம்மல, மாத்தளை மாவட்டத்தில் உக்குவெல, ரத்தோட்டை, மொனராகலை மாவட்டத்தில் படல்கும்புர, பிபில மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை ஆகிய பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது.
இந்த அறிவிப்பு நேற்று (05) மாலை 06.00 மணி வரை அமுலில் இருந்த நிலையில், மழை தொடர்ந்து பெய்து வருவதால், இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
வீதியின் இருபுறமும் ஆபத்தான பகுதிகளைக் கடந்து செல்லும்போது வாகன சாரதிகள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் வீதியின் இருபுறமும் வர்த்தகம் செய்பவர்கள் ஆபத்தான பகுதிகளில் வர்த்தகம் செய்தால், அந்த இடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும் என்றும் அந்த நிறுவனம், பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.