ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடந்த போது, அன்றைய ஜனாதிபதி வெளிநாடு சென்றிருந்தார் எனவும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவை பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்காமல் அவர் வெளிநாடு சென்றார் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் நடந்த பின்னர் தான் முன்னாள் பிரதமருடன் பாதுகாப்பு அமைச்சுக்கு சென்ற போது, ருவான் விஜேவர்தன இதனை கூறியதாகவும் அவர் கூறியுள்ளார்.
“எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் நடந்தவுடன் நான் அலரி மாளிகைக்கு சென்றேன். பாதுகாப்பு படைகளில் பிரதானிகளுக்கு இங்கு வர வேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளதாக அன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.
இதனால், நாம் பாதுகாப்பு அமைச்சுக்கு செல்வோம் என்று அவர் சொன்னார். இதனடிப்படையில் நாங்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு சென்றோம். அங்கு சென்று பாதுகாப்பு ராஜாங்க அமைச்சரான ருவான் விஜேவர்தனவிடம் நீங்களா பாதுகாப்பு அமைச்சர் என நான் கேட்டேன்.
ஜனாதிபதி வெளிநாடு சென்றுள்ளார். என்னை பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கவோ, பதவிப் பிரமாணம் செய்து வைக்கவோ இல்லை என ருவான் விஜேவர்தன கூறினார்.
நேற்றும் இந்த கேள்வியை தானே கேட்டனர். அலி சப்றி வொஷிங்டன் சென்றுள்ளார். பதில் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் என கேள்வி எழுப்பபட்டது. எவரும் பதில் நிதியமைச்சராக நியமிக்கப்படவில்லை.
இதேபோன்றே ருவான் விஜேவர்தனவுக்கு அன்று பொறுப்பை வழங்காது மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூர் சென்றிருந்தார்.
இதன் பின்னர் நாங்கள் பாதுகாப்பு சபைக்கு சென்றோம். நானும் சென்றேன். ஜனாதிபதிகள் முகங்களை பார்த்து தாம் விரும்பியவர்களை அங்கு அழைப்பது பற்றி அறிந்துக்கொண்டோம்” எனவும் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெறும் ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்