வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பின் போது அதற்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்தும், கட்சியில் வகித்து வந்த அனைத்து பதவிகளில் இருந்தும் எம்.எஸ். தௌபீக், இடை நிறுத்தப்பட்டுள்ளார். இந்த தகவலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தவும் கட்சி தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் காங்கிரஸின் மேலும் மூன்று உறுப்பினர்கள் அண்மையில் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.