முப்படை தலைமைத்தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் தமிழகத்தில் குன்னூர் அருகே இன்று கோர விபத்துக்குள்ளான நிலையில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் விபத்து இடம்பெற்ற இடத்திற்கு செல்லவுள்ளார்.
இந்த விபத்தில் இதுவரை 7 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து எம்.ஐ.17வி5 ராணுவ ஹெலிகாப்டர் இன்று பிற்பகலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் மையத்துக்கு புறப்பட்டு சென்றது.
அந்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதை மேலே பறந்து கொண்டு இருந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கியது. ஹெலிகாப்டரில் ராணுவ உயர் அதிகாரிகள், வீரர்கள் உட்பட 14 பேர் பயணம் செய்த நிலையில் ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத் ஹெலிகாப்டரில் பயணம் செய்துள்ளார்.
விபத்துக்குள்ளான விமானப்படை ஹெலிகாப்டரில் பயணித்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத் நிலை குறித்து இதுவரை தெரியவில்லை. ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்து இதுவரை 7 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
அதேவேளை விபத்துக்குள்ளான இடத்தில் மீட்கப்பட்ட ராணுவ அதிகாரிகளின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வரும் கூட்டத்தில் விபத்து தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.
அதோடு விபத்து நடந்த நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முப்படை தலைமைத்தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
மீட்பு பணியை துரிதப்படுத்தவும், காயமடைந்தோருக்கு உயரிய சிகிச்சை தரவும் முதலமைச்சர் உத்தவிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குன்னூர் செல்லவுள்ளதுடன் மீட்புப்பணிகள் மற்றும் விபத்து தொடர்பாக நேரில் ஆய்வு செய்யவுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.