இலங்கைக்கு சுமார் 25.5 பில்லியன் ரூபா நன்கொடை தொகை ஒன்றை வழங்குவதற்கு சீன அரசாங்கம் இணங்கியுள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சர் வெங் யீயின் இலங்கை விஜயத்தின் போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் டுவிட்டர் பதிவொன்றில் இந்த நன்கொடை பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தை புனரமைத்தல், சிறுநீரக நோயாளிகளை கண்டறியக்கூடிய வசதிகளை உடைய நோயாளர் காவு வண்டிகளை அறிமுகம் செய்தல், கொழும்பில் குறைந்த வருமானம் ஈட்டும் 1996 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மானித்தல் உள்ளிட்ட திட்டங்களை முன்னெடுப்பதற்கு சீனா இணங்கியுள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்ததுடன், பிரதமருடன் இருதரப்பு நாடுகளின் அரசியல் விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டிருந்தது.
இதன்போது சுற்றுலாத்துறை, முதலீடுகள், கொரோனா நிவாரண உதவித் திட்டங்கள், கொரோனா வைரஸ் பரவலுக்கு பின்னரான தயார் நிலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இலங்கையிலுள்ள மருத்துவ மாணவர்களை சீனாவிற்கு அனுப்புகின்றமை குறித்தும் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது