இழுவை மடி சட்டத்தை உடன் அமுல்படுத்துமாறும் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – வடமராட்சியில் கடற் தொழிலாளர்கள் சுதந்திர தினத்தை கருப்பு நாளாக அனுஷ்டித்துள்ளனர்.
இந்திய கடற் தொழிலாளர்களின் அத்துமீறல் மற்றும் கடற் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வடமராட்சி – சுப்பர்மடம் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்திற்கு நீமன்றம் தடைவித்திருந்த நிலையில், நேற்று மாலை பொலிஸாரினால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், இன்றைய தினம் வடமராட்சி – சுப்பரமடம் பகுதியில் சுதந்திர தினத்தை கருப்பு நாளாக அனுஷ்டித்த கடற் தொழிலாளர்கள், உயிரிழந்த மீனவர்களுக்கும் அஞ்சலியும் செலுத்தினர்.
மேலும், நூற்றுக்கணக்கான கடற் தொழிலாளர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் கஜேந்திரன் ஆகியோரும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது உரையாற்றிய சுமந்திரன். கடற் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாமல் தொடர்ந்தும் நீடித்துக் கொண்டிருக்கிறது. இது குறித்த சட்டங்களை உடனடியாக நடைமுறைப்படத்த வேண்டும் என்று தெரிவித்ததுடன், நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்போவதாகவும் தெரிவித்தார்.