இந்தியாவின் தலைநகரில் கொரோனாவால் பலியானோரின் உடல்களை நாய்களுக்கான சுடுகாட்டில் தகனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை, இந்தியாவின் தலைநகர் டெல்லியை உலுக்கி வருகிறது. நாள் ஒன்றிற்கு கொரோனாவால் 20-ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவதுடன், 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.
இப்படி தினந்தோறும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இறந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக நிலைமையைச் சமாளிக்க தெற்கு டெல்லியில் உள்ள துவாரகா செக்டர் -29 இல்(நாய்களை தகனம் செய்ய திட்டமிடப்பட்டிருந்த இடம்)தற்காலிகமாக உயிரிழக்கும் கொரோனா நோயாளிகளைத் தகனம் செய்ய டெல்லி மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
செக்டர் -29 இல் சுமார் 3.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த இடத்தில் இன்னும் சடலங்கள் எரிக்கும் பணிகள் தொடங்கப்படவில்லை. மாநிலத்தில் உயிரிழப்புகள், 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளதால் நிலைமையை சமாளிக்க இந்த இடம் உதவும் என டெல்லி அதிகாரிகள் கூறியுள்ளனர்.டெல்லியில் கடந்த வாரம் தினசரி 650 பேரின் உடல்களுக்கு இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த எண்ணிக்கை தற்போது 882ஆக உயர்ந்துள்ளன.
இது கொரோனா இல்லாத காலத்துடன் ஒப்பிடுகையில் பல மடங்க அதிகமாகும். வரும் காலத்தில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதால், குழப்பத்தைத் தவிர்க்கத் தினசரி 1,000 உடல்கள் வரை தகனம் செய்ய தயாராக இருக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.