பாகிஸ்தானில் குழந்தைகள் கண் முன்னாள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தாய் சம்பவத்தில், குற்றவாளிகள் இரண்டு பேருக்கும் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், பாகிஸ்தானின் Lahore-ல் இருக்கும் Gujjarpura பகுதியில், சாலை ஒன்றில் தன்னுடைய காரிற்கு போதுமான எரிபொருள் இல்லாத காரணத்தினால், பாகிஸ்தானில் பிறந்து பிரான்சில் குடியேறி குடியுரிமை பெற்ற பெண் ஒருவர் தன் குழந்தைகளுடன் சாலை ஓரத்தில் உதவிக்காக காத்திருந்தார்.
இது குறித்து அவர் தன்னுடைய உறவினருக்கு மொபைல் போன் மூலம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி தான் இருக்கும் இடத்தின் தகவலையும் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து அந்த உறவினர் குறித்த பகுதிக்கு வந்து பார்த்த போது, அந்த பெண் இரத்தக் கறையுடன் மோசமான நிலையில் இருந்துள்ளார். இது குறித்து உடனடியாக அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் சென்று புகார் அளித்தார்.
அப்போது இரண்டு பேர் கொண்ட கும்பல், தன்னுடைய காரை தாக்கியதுடன், தன்னையும், குழந்தைகளையும் தாக்கி, துப்பாக்கி முனையில் மிரட்டி, அருகில் இருக்கும் வனப்பகுதிக்கு தூக்கிச் சென்றனர்.
அங்கு குழந்தைகள் முன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கதறியுள்ளார், அதுமட்டுமின்றி தன்னிடம் இருந்த சுமார் ஒரு லட்சம் ரூபாய் பணம், தங்க நகைகள், மூன்று ஏடிஎம் கார்டுகள் போன்றவற்றையும் அந்த நபர்கள் திருடிச் சென்றுள்ளதாக தெரிவித்தார்.இந்த சம்பவம் நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாலையோரத்தில் உதவிக்காக காத்திருந்த பெண்ணிற்கு இப்படி ஒரு நிலையா? அந்த நபர் தண்டிக்கப்பட வேண்டும், மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று போராட்டம் நடைபெற்றது.
பொலிசார் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த மொபைல் தரவுகளைப் பயன்படுத்தி, இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குள், இந்த கொடூர செயலில் ஈடுபட்ட இரண்டு பேரை கைது செய்தனர்.அவர்களின் டி.என்.ஏ. மாதிரிகளை சோதனை செய்த போது, அதுவும் ஒத்துப் போனதால், அவர்கள் தான் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டது.
அதில் ஒருவரின் பெயர் Abid Malhi மற்றொருவரின் பெயர் Shafqat Ali என்பது தெரியவந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில், நேற்று சனிக்கிழமை இந்த வழக்கு விசாரணை குறித்து லாகூரில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இந்த வழக்கு குறித்த தீர்ப்பின் போது, நீதிபதி அர்ஷத் உசேன் பூட்டா குற்றவாளிகள் இரண்டு பேருக்கும் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் இரண்டு குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனையும், கொள்ளை குற்றச்சாட்டின் கீழ் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் நீதிமன்றம் வழங்கியது.
பாலியல் பலாத்காரக் குற்றம் கொடூரமான குற்றம் ஆகும். இது குழந்தைகளின் முன் செய்யப்படும்போது, அந்த கொடுமை மேலும் கொடுமையானது.
இந்த சம்பவம் பொது மக்களுக்கும் அதிர்ச்சியை அளிக்கிறது, எனவே குற்றம் சாட்டப்பட்ட நபர்களை இரும்புக் கயால் கையாள வேண்டும்.
இதனால் இந்த குற்றவாளிகள் இறக்கும் வரை கழுத்தில் தூக்கிலிடப்படுவார்கள், மரணதண்டனை தான் சரியான தீர்ப்பு என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இவர்களுக்கு மரண தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை. மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாலியல் குற்ற வழக்குகளை விரைவாக விசாரிக்கவும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவும் வகை செய்யும் புதிய சட்டம் பாகிஸ்தானில் இயற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.