இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு உள்ள நிலையில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் எரிவாயுவைக் கொள்வனவு செய்வதற்கு மக்கள் நீணட வரிசையில் காத்திருப்பதை அண்மைக்காலமாக அவதானிக்க முடிகின்றது.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தில் உள்ள லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு முன்னால் இன்றைய தினம் மக்கள் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு முண்டியடித்ததை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
நீண்டநேரம் மக்கள் வரிசையில் நின்று எரிவாயுவை கொள்வனவு செய்து சென்றதாகவும், பலர் எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியாமல் திரும்பி சென்றதாகவும் தெரியவருகிறது.
அத்துடன், யாழ்ப்பாண நகரிலும் எரிவாயு கொள்கலன்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை முதல் யாழ்ப்பாணம் – வைத்தியசாலை வீதியிலுள்ள கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு கொள்கலன் களஞ்சியசாலைக்கு முன்பாக எரிவாயு கொள்கலன்களுடன் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, பொதுமக்கள் குடும்ப பங்கிட்டு அட்டையுடன் வெயிலையும் பொருட்படுத்தாது நீண்ட வரிசையில் எரிவாயு கொள்கலன்களை பெற்றுக்கொள்வதற்கான காத்திருந்ததுடன் அப்பகுதியில் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்டத்தில் கரடிபோக்கு சந்தியில் அமைந்துள்ள சமையல் எரிவாயு கிளை காரியாலயம் ஒன்றின் முன் இன்று அதிகாலையிலிருந்து மக்கள் எரிவாயு பெறுவதற்காக கூடியிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கிளைக்காரியாலயத்திற்கு சமையல் எரிவாயு ஏற்றிய பார ஊர்தி வந்ததை அடுத்து அங்கு மக்கள் கூடியுள்ளனர்.
சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் மக்கள் நின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு கொள்கலன்களுக்கான தட்டுப்பாடு தொடர்ந்து நீடிப்பதால் பல்வேறு தொழில் முயற்சிகளும் பாதிக்கப்பட்டுள்ளன