இந்தியாவுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று (18) இலங்கை வந்தடைந்தார்.
கடந்த 15ம் திகதி இந்தியா சென்ற அவர், 16ம் திகதி இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவை சந்தித்து பேசினார்.
பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச சந்தித்தார்.
பின்னர் நிதியமைச்சர் இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ். ஜெயசங்கர் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்துப் பேசினார்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையிலான சந்திப்பின் பின்னர் இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதிக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த கடன் வசதி இலங்கையில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய பயன்படுத்தப்படவுள்ளது.
இந்த கடனில் 75 சதவீதமான பொருட்கள், சேவைகள் இந்தியாவிடம் இருந்தும் ஏனைய 25 சதவீத கடனில் வேறு நாடுகளில்இருந்தும் பொருட்கள் சேவைகளை கொள்வனவு செய்ய முடியும்.
நிதி அமைச்சரின் இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார பங்காளித்துவம் தொடர்பில் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
நிதியமைச்சர் மற்றும் இந்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஸ்ரீ ராஜ்குமார் சிங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.