நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பரபரப்பு, கிளுகிளுப்பு அரசியலில் மாத்திரமே ஈடுபடுகின்றார் என்பது கண்கூடு.
ஆர்ப்பாட்டங்கள். பேரணிகள் நடைபெற்றால் பொலிஸார், இராணுவத்தினர், புலனாய்வுத் துறையினர் படம் எடுப்பது வழமை. அவர்களுக்கென ஊடகப் பிரிவும் உண்டு.
ஊடகவியலாளர் நிமலராஜன் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டதைக் கண்டித்து 2000 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் முதன் முதலில் சுதந்திர ஊடக இயக்கத்தின் ஒத்துழைப்புடன் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தது. அன்று முதல் இன்று வரை கொழும்பில் பல ஆர்ப்பாட்டங்களைச் சிங்கள ஊடக அமைப்புகளுடன் இணைந்து ஒன்றியம் நடத்தியிருக்கிறது. அப்போதெல்லாம் புலனாய்வுப் பிரிவு அனைவரையும் படம் எடுத்து அச்சுறுத்தியிருந்தது.
அதுவும் போர் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலங்களில்- சிவராம், லந்த விக்கிரமதுங்க உள்ளிட்ட பல மூத்த ஊடகவியலாளர்களின் கொலைகள் மற்றும் தாக்குதல், அச்சுறுத்தல்களைக் கண்டித்துக் கொழும்பில் மாத்திரமல்ல, வடக்குக் கிழக்கில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் அனைத்திலும் புலனாய்வுப் பிரிவு படம் எடுத்திருக்கின்றது.
அச்சுறுத்தியுமிருக்கிறது. ஏன், கடத்தப்பட்ட சிவராம் நாடாளுமன்ற வளாகத்துக்கு அருகில் உள்ள வீதியில் சடலமாகக் கிடக்கிறார் என்ற தகவல் கசிந்ததும், நான் உள்ளிட்ட சில தமிழ்- சிங்கள ஊடகவியலாளர்கள் அதிகாலைவேளை சம்பவ இடத்திற்கு உடனடியாகச் சென்றோம். அங்கு சிவில் உடைகளில் நின்ற புலனாய்வுப் பிரிவினர் இரகசியமாக எங்களைப் படம் எடுத்தனர். அச்சுறுத்தும் நோக்கிலேதான் அவா்கள் படம் எடுக்கிறார்கள் என்பது எங்களுக்கும் தெரியும். ஆனால் அதற்காக ஒருபோதும் நாங்கள் பரபரப்புக் காட்டி வாதிட்டதில்லை.
சுனந்த தேசப்பிரிய, பாசன, போதல ஜயந்த போன்ற சில சிங்கள ஊடகவியலாளர்கள் படம் எடுப்பது தொடர்பாகப் பொலிஸாருடன் அவ்வப்போது வாதிட்டிருக்கின்றனர். ஆனால் அந்த வாதாட்டங்கள் பரபரப்பு, கிளுகிளுப்புச் செய்திகளுக்கானதல்ல.
ஊடகவியலாளர்கள் உசாராக இருக்கின்றனர் என்பதை அரசாங்கத்துக்கும் படைத்தரப்புக்கும் தெரியப்படுத்தும் ஒரு அடையாளத்துக்காக மாத்திரமே படம் எடுப்பது தொடர்பாக அவர்கள் வாதாடினர். அத்துடன் கொழும்பில் நாங்கள் நடத்திய எந்தவொரு ஆர்ப்பாட்டங்களிலும் அரசியல்வாதிகளைக் கலந்துகொள்ள அனுமதிப்பதில்லை.
இருந்தாலும் சில அரசியல்வாதிகள் தாங்களாகவே முன் வந்து பங்கெடுப்பர். ஆனாலும் அவர்களை எந்தவொரு மேடைப் பேச்சுக்கும் நாங்கள் அனுமதிப்பதில்லை.
இதுதான் வழமை. ஆகவே சாணக்கியன் போன்ற தமிழ்த்தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், இப்படியான ஆா்ப்பாட்டங்களில் கலந்துகொண்டு பரபரப்புச் செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். வாக்கு அரசியலுக்காக ஊடகத்துறை நடத்தும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் நிகழ்வுகளில் பங்குகொண்டு பிரபல்யம் தேடுவதை நிறுத்த வேண்டும்.
ஆர்ப்பாட்டங்களின்போது பொலிஸாரோ, புலனாய்வுப் பிரிவினரோ படம் எடுப்பது ஊடக சுதந்திரத்துக்கு ஆபத்தானது என்பது ஊடகவியலாளர்களுக்குத் தெரியாததல்ல. எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டங்களைத் தடுக்கும் நோக்கிலேயே இவ்வாறு படம் எடுத்து மிரட்டுகின்றனர் என்பதுதான் உண்மை. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் இப்படித்தான் செய்கிறார்கள்.
அதற்காகச் சாணக்கியன் போன்றவர்கள் சும்மா மூக்கை நுழைத்துச் சத்தமிட்டு சமூகலைத்தளங்களில் தம்மைப் பிரச்சாரப்படுத்த வேண்டிய அவசியமில்லை.
பரபரப்புக் காட்டாத அரசியல் செயற்பாடுதான் நேர்மையானது. கிழக்கு மாகாணத்தில் செய்யப்பட வேண்டிய அரசியல் வேலைத்திட்டங்கள் எத்தனையோ உண்டு.
குறிப்பாக முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் பற்றி ஆக்ரோசமாக நாடாளுமன்றத்தில் உரையாற்றியது போன்று, தமிழ் முஸ்லிம் புரிதலுக்காகக் கிழக்கில் நடத்தப்பட்ட விழிப்புணர்வுக் கூட்டங்கள் எத்தனை? இது ஒரு உதாரணத்துக்கான கேள்வி மாத்திரமே- இப்படிக் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் பல உண்டு.
(பேச்சும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும்) ஆகவே இவை பற்றியெல்லாம் சிந்திக்காமல் எங்கு இலவச விளம்பரம் தேட முடியுமோ அங்கு தலைகாட்டிப் பிரதான ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் செய்திகள், வீடியோக்கள் வந்தால் போதும் என்ற எண்ணத்தைச் சாணக்கியன் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனிமேல் கைவிட வேண்டும். தமிழ் சினிமா நடிகர்களின் பாணியிலான அரசியல் தமிழ்த்தேசிய அரசியல் பரப்புக்கு ஒத்துவராது.