நாட்டின் மின்கட்டமைப்பை இருண்ட யுகத்துக்கு தள்ளும் வகையில் உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மின்கட்டணத்தை தீர்மானிக்கும் உரிமையை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவது முறையற்றது என மின்சார சபையின் மின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் தனுஸ்க பராக்ரம தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபை மின் பொறியியலாளர் சங்கத்தின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது,
நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு இலாபமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் செயற்பாடுகளை மாத்திரம் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்தில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. மின்சார சபையை 12 ஆக கூறுப்படுத்தி அதன் உரிமத்தை தனியார் நிறுவனங்களுக்கு உரித்தாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்கள் பெறும் இலாபத்துக்கு அமைய மின்கட்டணம் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்படுவது பாரதூரமான நெருக்கடிகளை ஏற்படுத்தும்.
மின்சட்டத்தை திருத்தம் செய்வதுடன் மின்கட்டமைப்பில் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் வகிபாகத்தை வரையறுப்பதற்கும் இச்சட்டமூலத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
நியாயமற்ற வகையில் மின்கட்டணம் அதிகரிக்கப்படும் போது பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அதற்கு இடமளிக்காததால் ஆணைக்குழுவின் அதிகாரம் மட்டுப்படுத்தப்படவுள்ளது. நாட்டின் மின்கட்டமைப்பை இருண்ட யுகத்துக்கு தள்ளும் வகையில் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலத்துக்கு அமைய செயற்பாடுகளை எதிர்வரும் நவம்பர் மாதமளவில் முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும்.
சில வேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அது அரசாங்கத்தை பொறுப்பேற்கும் தரப்புக்கு சவாலாக அமையும். உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்தை நீதிமன்றில் சவாலுக்குட்படுத்துவோம்.
ஆகவே சட்டமூலத்தில் உள்ள குறைகளை அரசாங்கம் திருத்திக் கொள்ள வேண்டும் என்றார்.