இந்திய நிதியுதவியின் கீழ் பாரத் லங்கா வீட்டுத்திட்டம் தொடர்பாக மலையகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், வேலுகுமார் மற்றும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் இடையே கடந்த இரண்டு நாட்களாக நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
குறித்த வீடமைப்பு திட்டத்தில், தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு மட்டுமே வீடுகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டதையடுத்தே, நேற்று முன்தினம் (20.02.2024) மேற்படி வாக்குவாதம் ஆரம்பித்துள்ளது.
தொடர்ந்து, அந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக ஜீவன் தொண்டமான் உரையாற்றுகையில்,
“நாங்கள் கட்சி ஆதரவாளர்களுக்கு மட்டுமே வீடு கட்டிக்கொடுப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால், இந்த திட்டத்தின் பயனாளர் பட்டியலையே நாங்கள் இன்னும் வெளியிடவில்லை.
எந்தக் கட்சி, கட்சி ஆதரவாளர்களுக்கு அதிக சலுகைகளை வழங்கியது என அனைவருக்கும் தெரியும்.
குறிப்பாக வேலுக்குமார் போன்றோர் அறிந்த விடயமே இது” என கூறினார்.
அதனை தொடர்ந்து பதிலளித்த வேலுகுமார்,
பயனாளர் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டதாகவும் அது அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது எனவும் விமர்சித்துள்ளார்.
மேலும், இந்த அரசாங்கம் 5 வருடமாக வீட்டுத்திட்டத்தை ஆரம்பிக்காது, தேர்தல் வருடத்தில் வீட்டுத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக மனோ கணேசன் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் குற்றம் சாட்டியுள்ளார்.