முறையான திட்டம், அனுபவம் மற்றும் சர்வதேச தொடர்புகள் என்பவற்றின் காரணமாகவே எவ்வித நிபந்தனைகளும் இன்றி தான் நாட்டைப் பொறுப்பேற்றதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , அதன் ஊடாக நரகத்தில் விழுந்த நாட்டை மீட்க முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருந்ததாகவும் தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் உரையாற்றுகையில்,வீழ்ச்சியடைந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் மீட்சித் திட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதன் விளைவாக 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து பொருளாதார முன்னேற்றத்திற்கான பயணம் ஆரம்பமாகியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்திட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இந்த ஆண்டுக்குள் நிறைவு பெறும். மறுசீரமைப்புக்களால் நாட்டின் நிதி நிலைமை ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளன.
அதோடு அரச செலவுகள் 20 சதவீதத்தால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 3 சதவீதத்தால் உயர்வடையும் என்றும் மேலும் தெரிவித்தார்.