ஆத்தூரில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த தி.மு.க.வினர் தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி சாலையில் படுத்து டிராபிக் எஸ்.ஐ போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் நேற்று தி.மு.க. வேட்பாளர் சின்னதுரை வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். அதனால் ஆத்தூருக்கு ஏராளமான தி.மு.க.வினர் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது சில தி.மு.க. நிர்வாகிகள் புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் வெளியே சாலையை கடந்து செள்ள முயற்சித்துள்ளனர்.
அப்போது அந்த இடத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ரவி, வேட்பாளருடன் சிலர் மட்டுமே இந்த வழியில் செல்ல அனுமதிக்கப்படும், வேறு யாருக்கும் செல்ல அனுமதி கிடையாது என கூறியுள்ளார்.
இதனால் அவருக்கும் அந்த வழியாக வாகனங்களில் வந்த சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபமடைந்த ரவி அங்கிருந்த பேரிகெட்டை இழுத்து நிறுத்தி சாலையை மரித்துள்ளார். ஆனால் அவர்கள் ரவியை இடித்து தள்ளிவிட்டு சாலையை கடந்து சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த எஸ்.ஐ ரவி தன்னை சிலர் தாக்கியதாகவும், எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை இங்கிருந்து செல்ல மாட்டேன் எனவும் கூறி நடுரோட்டில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரவி அங்கிருந்து எழுந்து சென்றார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.