கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான இரண்டாவது டோஸ் தடுப்பூசியை ஏற்றி மூன்று மாதங்கள் கடந்த 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், நடமாடும் சேவை மூலம் மூன்றாவது டோஸ் (Booster) தடுப்பூசியை ஏற்ற நடவடிக்கை எடுக்குமாறு, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கினார்.
நேற்று (26) முற்பகல் கூடிய கொவிட் தடுப்புச் செயலணிக் கூட்டத்தின் போதே, ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கினார்.
வைத்தியசாலைகளுக்கு க்லினிக் செல்லும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், அந்த சிகிச்சையகத்தில் வைத்தே இந்த பூஸ்டர் தடுப்பூசியை வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான இரண்டாவது டோஸ் தடுப்பூசியைச் செலுத்தி ஒரு மாதம் கடந்த தொற்றா நோய்களுக்கு இலக்காகியுள்ள 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், மூன்றாவது டோஸ் தடுப்பூசியைச் செலுத்தவும் தீர்மானிக்கப்பட்டது. இதன் பிரகாரம், புற்று நோயாளிகள், புற்று நோய்க்கு சிகிச்சை பெறுவோர், உறுப்பு மாற்று சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டோர், இரத்தமாற்று செய்யப்பட்ட நோயாளிகள், தொற்றா நோய் காரணமாக நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்த அனைவருக்கும், விசேட வைத்திய பரிந்துரைக்கமைய மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
உரிய சிகிச்சையகங்கள் (க்லினிக்) அல்லது சனிக்கிழமை நாட்களிலும், இத்தரப்பினருக்கான மூன்றாவது தடுப்பூசி ஏற்றல் பணிகள் முன்னெடுக்கப்படும் என்று, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
கொவிட் நோயாளிகளுக்காக, பிரித்தானியா உள்ளிட்ட சில நாடுகளில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் மோல்னுபிரவீர் வில்லை (Molnupiravir Capsule) பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன், கொவிட் வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளை நாட்டுக்குக் கொண்டுவந்தது போன்றே, அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் ஊடாக இந்த வில்லைகளையும் நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவுக்கு, ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கினார்.
கொவிட் தொற்றுப் பரவல் தொடர்பில் கிராமிய மக்கள் கொண்டுள்ள கவனக் குறைவு தொடர்பிலும் இதன்போது பேசப்பட்டதுடன், கிராமிய ரீதியில் பரவும் கொவிட் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தல் மற்றும் அது தொடர்பில் அவர்களுக்குத் தெளிவுபடுத்தல்களை முன்னெடுப்பது தொடர்பிலான வேலைத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இராஜாங்க அமைச்சர்களான சிசிர ஜயகொடி, சன்ன ஜயசுமன, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் விசேட வைத்திய நிபுணர் சஞ்ஜீவ முனசிங்க, முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பு உயரதிகாரிகள் பலரும், இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.