இறக்குமதி செய்யப்பட்ட நச்சு இரசாயனம் கொண்டதாக நம்பப்படும் தேங்காய் எண்ணெய் பவுசர்கள் இரண்டை தங்கொட்டுவ பிரதேசத்தில் பொலிஸார் கைப்பற்றினர்.
27,500 லீற்றர் தேங்காய் எண்ணெய் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பவுசர்கள் இரண்டும் புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்வதாகக் கூறப்படும் ஒரு நிறுவனத்தைச் சேர்ந்தவை எனவும் பொலிஸார் கூறினர்.
கடந்த 25ஆம் திகதி ராகமவிலுள்ள களஞ்சியசாலையிலிருந்து குறித்த தேங்காய் எண்ணெய் எடுத்துச்செல்லப்பட்டு தங்கொட்டுவ எண்ணெய் ஆலை அருகில் நிறுத்தப்பட்டிருந்த போது இரு பவுசர்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
எண்ணெய் பவுசர்களின் சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்ட பின் விடுதலை செய்யப்பட்டனர்.
எண்ணெய் பவுசர்களிலிருந்து மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்படவுள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.